அயோத்தி விவகாரம்: மறுபடியும் அன்றாடம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!

கடந்த ஒருபது வருட சட்டப் பிரச்னையான அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் சுப்ரீம் கோர்ட் அமைத்த சமரசக் குழுவின் முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், வழக்கு விசாரணை வருகிற 6-ஆம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி கடந்த1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அந்த மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா, நிர்மோஹி அகாரா ஆகிய மூன்று அமைப்புகளும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிக்கும் வகையில் சமரசக்குழுவை கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அமைத்தது.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய தமிழர்கள் மூவர் அடங்கிய குழு 8 வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சமரசக்குழு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசக்குழு மே மாதம் 10-ஆம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் பேரில் சமரசக் குழுவிற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் அளித்த சுப்ரீம் கோர்ட், ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டிருந்தது. இதே போன்று ஜூலை மாதம் 29 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு டெல்லியில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் சமரசக்குழு தனது அறிக்கையை மூடி, முத்திரை இடப்பட்ட உறையில் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் பேரில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை மேற் கொண்டது. இதில் அயோத்தி வழக்கில் சமரசக்குழுவால் எவ்வித இறுதி முடிவையும் எட்ட முடியவில்லை என்றும், வருகிற 6 ஆம் தேதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.

மேலும் வழக்கு விசாரணை தொடங்கு முன்னர், வழக்கு தொடுத்துள்ள அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து 100 நாட்கள் விசாரணை நடத்தி வருகிற நவம்பர் மாதம் 17 ஆம் தேதி வாக்கில் வழக்கில் தீர்ப்பு வழங்கவும் சுப்ரீம் கோர்ட் திட்டமிட்டு இருக்கிறது.