இப்ப விடற தண்ணீரை நம்பி எந்தவொரு விவசாயமும் செய்ய முடியாது!

இப்ப விடற  தண்ணீரை நம்பி எந்தவொரு விவசாயமும் செய்ய முடியாது!

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

cfauvery sep 5

இந்த மனு கடந்த வியாழன் அன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது “இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ‘வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்.“ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதோடு தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் வருகிற திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை திங்கள் கிழமை (இன்று) நடைபெறும் என்றது. இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் 15 ஆயிரம் கன அடி நீர் போதாது என்று விவசாய சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு முன்கூட்டியே பிறப்பித்திருக்க வேண்டும். மேலும் இந்த தண்ணீரை நம்பி எந்தவொரு விவசாயமும் செய்ய முடியாது. 100 நாட்களுக்காவது தண்ணீர் திறக்க வேண்டும். யானைப்பசிக்கு சோளப்பொரி. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Posts

error: Content is protected !!