September 17, 2021

கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

நமக்கு நெருக்கமாகவர்களோ. முன் பின் அறிமுகமில்லாதவர்களோ ஒரு சக உயிரின் மீது கருணையற்றவர்களால் நிகழ்த்தப்படுவதுதான் கொலை. அதே ஓர் உயிரின் மீதான கருணையின் காரணமாகவும் கொலை புரியலாம் என்கிற கருத்தைக் கொண்டது ‘கருணைக்கொலை’. அதாவது ந் தீர்க்க முடியாத நோய், தாங்க முடியாத வலி, மீண்டு வர இயலாத மூளை செயலிழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு உயிரைக் கொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், வாழ்தலே துன்பம் என்றான பின் அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது கொலை ஆகாது என்றும் கருணைக்கொலை மீதான இருவேறான கருத்துகள் இருக்கின்ற நிலையில் இந்த உலகில் ஒரு மனிதன் கண்ணியமாக வாழ உரிமை இருக்கும் அளவுக்கு கண்ணியமாக மரணிக்கவும் உரிமை உண்டு, தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து இருந்தது. அதில் குறிப்பிடுகையில், ‘‘தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், கோமா நிலையில் இருப்பவர்களை விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரி இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சிந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் 4 நீதிபதிகளும் நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்தாலும், அனைவரும் கருணைக்கொலை என்ற விஷயத்துக்கு அனுமதி அளித்தனர். அதிலும் தீராத நோய் உள்ளவர்கள் கண்ணியத்துடன் உயிர் துறக்க அனுமதிக்கலாம் என்ற விஷத்தில் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

அவர்கள் அளித்த தீர்ப்பின் சாராம்சம் இதோ:

‘‘இந்த உலகில் ஒருமனிதன் கண்ணியமாக வாழும் இருக்கும் உரிமை, அவர் உயிர்துறப்பதிலும் இருக்கிறது. தீராத நோய் உடையவர்கள், செயலற்ற நிலையில் சிகிச்சையால் குணமடையாத நிலையில் இருப்பவர்கள், செயற்கை சுவாசத்தால், தீவிர உயிர்காக்கும் கருவியால் உயிர்வாழ்பவர்கள், கோமா நிலையில் இருபவர்கள், உடல் இயக்கம் இல்லாமல் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உயிர் துறக்க அனுமதிக்கலாம்.

அதாவது, சம்பந்தப்பட்ட நோயாளி இனிமேல் உடல்நிலையில் மேம்பட்டு செயல்பட முடியாத பட்சத்தில், அந்த நோயாளியை விதிகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்யலாம். இந்த உலகில் உயிர்வாழ விருப்பம் இல்லை, இருக்கிறது என்பதை அந்த நோயாளியால் கூற முடியாத நிலையில் இருக்கும் போது, கருணைக் கொலை செய்யும் விஷயத்தை நோயாளியின் நெருங்கிய நண்பர், ரத்த உறவுகள் ஆகியோர் நோயாளி மரணிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், எப்படி செயல்படவேண்டும் என்ற விதிகள் போன்றவை வகுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை சட்டம் இல்லை. எந்த சட்டம் கொண்டுவரும்வரை எங்கள் பரிந்துரைகள் செயல்பாட்டில் இருக்கும்’’ என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு இதேபோன்ற ஒரு வழக்கில் நீதிபதிகள் கருணைக் கொலை செய்ய அனுமதித்துள்ளனர். அருணா ஷான்பாக் என்ற நோயாளி செயலற்ற நிலைக்கு சென்று, தீவிர உயிர்காக்கும் கருவிமூலம் உயிர்வாழ்ந்து வந்ததால், அவரை உயிர் துறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடிசினல் ரிப்போர்ட்:

கருணைக்கொலையை (Mercy killing) நல்மரணம் (Euthanasia) என்று குறிப்பிடுகின்றனர். நேரடி நல்மரணம் (Active Euthanasia), சாத்விக நல்மரணம் (Passive euthanasia) என இது இருவகைப்படும். மரணத்தை ஏற்படுத்தும் மருந்தை ஊசியின் வாயிலாகச் செலுத்தி உயிரைப் போக்குவது நேரடி நல்மரணம். உயிர் வாழ்வதற்கான உபகரணங்களை அகற்றி விடுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துவது சாத்விக நல்மரணம். இது பாதிக்கப்பட்டவரே நல் மரணத்துக்கு ஆட்படுத்தும்படி விரும்பிக் கேட்பது (voluntary), அவரது உறவினர்கள், நண்பர்கள் கேட்பது (involuntary) என இருவகைப்படுகிறது.

உலக அளவில் புற்றுநோய், Amyotrophic Lateral Sclerosis, Chronic Obstructive Pulmonary Disease என இம்மூன்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத்தான் பெரும்பாலும் கருணைக் கொலைக்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. உலகின் பல நாடுகளும் கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கவில்லை. ஒருங்கிணைந்த அமெரிக்காவில் Oregon மாநில அரசு மட்டும் முதலில் கருணைக் கொலைக்கு ஆதரவான சட்டத்தைப் பிறப்பித்தது.

அதன் தாக்கத்தில் மேலும் சில மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் நெதர்லாந்து போன்ற மேலும் சில நாடுகள் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. கருணைக் கொலையை அவர்கள் Physician Assisted Suicide அதாவது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்த்தப்படும் தற்கொலை என்று குறிப்பிடுகிறார்கள்.

மரணத்தை ஏற்படுத்தும் மருந்துகளை பாதிக்கப்பட்டவரே உட்கொண்டு இறக்கும்படியான சூழலை உருவாக்கிக் கொடுக்கின்றனர். இயலாதவர்களுக்கு கார்பன் மோனாக்சைடு வாயுவைச் செலுத்துவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தலாம். வலி இல்லாத மரணம் என்பதுதான் கருணைக் கொலையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.