March 26, 2023

2018ம் ஆண்டு முதல் சவுதியில் விளையாட்டு அரங்கில் பெண்கள் அனுமதி!

உலகில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கும் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்கள் விளையாட்டு மைதானங்களில் நுழைய அனுமதி இல்லை. ஆனால் சமீபத்தில் சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முயற்சியால் ‘விஷன் 2030’ (Vision 2030 ) என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்பட பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெண்கள் மீதான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டலாம் என்று அறிவிக்க ப்பட்டது. சவுதி அரேபிய பெண்கள் மற்றும் உலக நாடுகளை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். இந்நிலையில் வரும் 2018ம் ஆண்டு முதல் சவுதியில் உள்ள மூன்று விளையாட்டு அரங்கில் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

ரியாத், ஜெட்டா மற்றும் தாமன் நகரங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை கொண்டாட முதல் முறையாக ரியாத் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.