சவுதி இளம் பெண் ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு கனடா அடைக்கலம்!

சவுதி இளம் பெண் ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு கனடா அடைக்கலம்!

கடந்த வாரம் மூன்று தினங்களுக்கும் மேலாக ட்விட்டர் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற சவுதி அரேபியாவில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண் ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு அடைக்கலம் வழங்குவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோ அறிவித்தார். அதை தொடர்ந்து ரஹாப் வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கில் இருந்து கனடாவுக்கு கிளம்பி சென்றார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணான ரஹாஃப் முகமது அல்குனுன் சமீபத்தில் இஸ்லாம் மதத்தை துறந்தார். பின் பெற்றோருக்கு தெரியாமல் குவைத்தில் இருந்து பாங்காக் சென்றார். பாங்காக் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் தஞ்சம் கேட்டு ரஹாஃப் முகமது அல்குனுன் மனு அளித்தார். அங்கு ஒரு அறை எடுத்து தங்கிய அவர், தனது கைபேசி மூலம் அவசரமாக dவிட்டரில் கணக்கு தொடங்கி தன்னுடைய நிலையை உலக மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

தன் குடும்பத்தாரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கட்டாய திருமணத்திற்கு வறுபுறுத்தப்பட்டதாகவும் ரஹாப் குற்றம்சாட்டினார். அதன் காரணமாக தான் இஸ்லாமை துறந்துவிட்டதாகவும் ரஹாப் ட்விட்டரில் தெரிவித்தார்.

இப்படி இஸ்லாமை துறந்தவர்களுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரம் பலரின் கவனத்தை கவர்ந்தது. ஒரு வாரத்தில் ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு ட்விட்டரில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

தாய்லாந்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்து அகதிகள் முகாமில் அடைக்கலாம் அல்லது சிறைக்கும் அனுப்பலாம் என்று கருதிய ரஹாஃப் அவர் தங்கியிருந்த அறையின் கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு தனது ட்விட்டர் பிரசாரத்தை நடத்தி வந்தார்.

டுவிட்டரில் ஆதரவு குவிந்த அதேசமயம், அவருக்கு ட்விட்டர் மூலம் ஏகப்பட்ட கொலை மிரட்டல் களும் வந்தன. அதனால் தனது டுவிட்டர் பக்கத்தை அவர் முடக்கினார். அதே சமயம், சேவ் ரஹாஃப் (#SaveRahaf) என்ற ஹேஷ்டாக் மூலம் அவருக்கு ஆதரவான பிரசார இயக்கத்தை பலர் நடத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் சேவ் ரஹாஃப் ஹேஷ்டேக் வைரலானது.

இதற்கிடையில் ரஹாப்புக்கு ஐநா அகதி அந்தஸ்தை வழங்கியது. அவருக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஐநா அகதிகள் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வந்தன.

ஆனால் அவருக்கு பாங்காக் குடியுரிமை அளிக்கக் கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத் தாரும் பாங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளும் வலியுறுத்தினர். ஆக, கொலை மிரட்டல் களால் உயிருக்கு அஞ்சிய ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு உதவ கனடா முன்வந்தது. ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு அடைக்கலம் வழங்க கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோ உத்தரவிட்டார்.

‘‘மனித உரிமை மற்றும் பெண்கள் உரிமைக்காக கனடா என்றும் துணை நிற்கும். அதனால் ஐநாவின் கோரிக்கையை ஏற்று அந்த இளம்பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளோம்’’ என ஜஸ்டின் டிருடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து ரஹாஃப் முகமது அல்குனுன் நேற்றிரவு கனடா கிளம்பி சென்றார். அவர் தென் கொரியா வழியாக கனடா செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவின் மனித உரிமை மீறல்களை கனடா தொடர்ந்து கண்டித்து வந்ததால் கடந்த ஆண்டு கனடாவுடனான தூதரக உறவை சவுதி அரேபியா முறித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஹாஃப் முகமது அல்குனுனுக்கு அடைக்கலம் அளித்த விவகாரம் இருநாடுகள் இடையே மேலும் சிக்கல்களை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!