சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொலை: 5 பேருக்கு மரணத் தண்டனை கோருகிறது!

சவுதி பத்திரிகையாளர் கஷோகி கொலை:  5 பேருக்கு மரணத் தண்டனை கோருகிறது!

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சட்ட்டப்பட்டுள்ள 5 பேருக்கு மரண தண்டனை கோரியுள்ளது சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம். இதனிடையே அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக சவுதி அரேபியா இன்று ஒப்புக்கொண்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பத்திரிகையில் பணியாற்றி வந்த சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2ம் தேதி காணாமல் போனார். துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவர் சவுதி அரசின் ஆணைப்படி தூதரகத்தில் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்தது. ஆரம்பத்தில் துருக்கி அரசின் குற்றச்சாட்டை மறுத்த சவுதி அரசு பின் ஜமால் காஷோகி தூதரகத்தில் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது. ஜமால் காஷோகி கொலை செய்யப்பட்டதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு எழுந்தது  பல உலக நாடுகள் சவுதி அரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. சர்வதேச அரங்கில் சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் அதிகரித்தது.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞரின் பேச்சாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அதன் பின் அவர் உடல் பல பாகங்களாக வெட்டப்பட்டு தூதரகத்தில் வெளியே இருந்த ஒரு நபரின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொலைக்கும் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜமால் கஷோகியை கொல்ல உத்தரவிட்டவர் மற்றும் அவரை கொலை செய்தவர் என்று 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார் என்று அரசு வழக்கறிஞரின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதன் மூலம் சவுதி தூதரகத்தில் ஜமால் கஷோகி எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விவரத்தை சவுதி அரேபியா முதல்முதலாக வெளியிட்டுள்ளது.

ஜமால் கஷோகி மரணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசு தரப்பு வெளியிட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை என துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு தெரிவித்தார். இது குறித்து தொலைகாட்சியில் அவர் அளித்த உரையில்‘‘சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. ஜமால் கஷோகியின் மரணம் திட்டமிட்ட கொலை. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையில் எந்த ஆதாரமும் மறைக்கப்படக் கூடாது. ஜமால் கஷோகி மரணம் தொடர்பான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர துருக்கி அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும்’’ என்று அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு கூறினார்.

error: Content is protected !!