July 28, 2021

ஹஜ் புனித பயணம் : சவுதியைச் சேர்ந்த 600 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி!

மெக்கா நகர் என்பது இஸ்லாமியர்களின் புனிதத்தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம். இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதே ஹஜ். இது அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்று சொல்லப்படாவிட்டாலும், ஹஜ் கடமையை நிறைவேற்றும் உடல் மற்றும் பொருளாதாரத் தகுதி கொண்டவர்களுக்கு, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஹஜ் புனித பயணத்துக்கு இந்த ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்டது போல் முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு நேற்று வெளியிட்டது.

அதன்படி இந்த ஆண்டு, சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.