March 21, 2023

சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா + ஆடை கட்டுபாட்டில் தளர்வு!

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களை தவிர பிறர் நுழைவது மிக கடினம். சுற்றுலாவுக்கு சவுதி அரேபியா செல்வதற்கான செலவும் மிக அதிகம். அங்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட ஹோட்டலில்தான் தங்க வேண்டும், குறிப் பிட்ட நிறுவனங்கள் மூலம்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கடினமான விதிமுறைகளைச் சந்திக்க வேண்டும். மேலும் சவுதிக்குள் நுழைய சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கவிருப்பதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளமிக்க  முக்கியமான நாடாக விளங்கி வரும் சவுதி அரேபியாவில் மிகவும் கட்டுக்கோப்பான விதிமுறைகள், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அமலில் உள்ளன. பொதுவெளிகளில் பெண்கள் உடலை மறைக்கும் விதமான ஆடைகள் அணிவது அங்கு கட்டாய விதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவரை தொழில் முறை விசாக்களை மட்டுமே சவுதி அரேபிய வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2030ம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவை  பொருளாதார மண்டலமாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா விசாக்களை வழங்கப் போவதாக அந்நாட்டு சுற்றுலா அமைச்சர் அஹமது கதீப் அறிவித்துள்ளார்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதண சின்னங்கள், துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் இயற்கை எழில் போன்றவற்றை கண்டு சுற்றுலா பயணிகள் இனி வியக்கலாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 49 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆன்லைன் வாயிலாக இந்த விசாவை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடுமையான ஆடை கட்டுப் பாடுகள் (Abaya Rule) வெளிநாட்டு பெண்களுக்கு தளர்த்தப் படும், அவர்கள் உடலை மறைக்கும் ஆடைகளை அணியத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மையால் துவண்டு கிடக்கும் சவுதி இளைஞர்கள் பலருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும், ஓட்டல் உள்ளிட்ட துறைகள் வளர்ச்சியடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.