சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

சவுதி அரேபியா மன்னராட்சியின் கீழ் இயங்கும் நாடாகும். இந்த நாடு பழமைவாத நடைமுறைகளை பின்பற்றிவருகின்றது. கார் ஓட்டுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, மைதானத்தில் சில விளையாட்டுக்களை நேரில் பார்க்கக்கூட சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் சமீப காலமாக சவுதி அரேபிய அரசு தனது நிலைப்பாட்டில் சற்றே மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அந்நாட்டின் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும், சர்வதேச பெண்கள் தினம் சமீபத்தில் அரண்மனையில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியளிக்க மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஓட்டுநர் உரிமங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னரின் இந்த முடிவுக்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சவுதி மக்கள் தொகையில் ஆண்களுக்கு, நிகராக பெண்களும் சரிபாதி இடம்பிடித்து விட்ட இந்த நேரத்தில் இது போன்ற முக்கிய முடிவுகள் அவசியம் என மன்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சவுதி அரேபிய மன்னர் சல்மானின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்த நடவடிக்கை சவுதி அரேபியா பெண்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!