சவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்!

சர்வதேச அளவில் 103 நாடுகளில் தூக்குத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. 50 நாடுகளில் தூக்கு தண்டனை அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. 6 நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்தியா, வளை குடா நாடுகள் உள்ளிட்ட 36 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை இன்னும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நாடான சவுதி அரேபியாவில் தீவிர வாதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு செயல்களில் ஈடுபட்டதான குற்றச் சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றி வந்ததுதெரிந்தது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை சீர்குலைப்பது மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகிய வற்றின் பொருட்டு மறைமுகமாகச் செயல்படும் தீவிரவாத குழுக்களை அவர்கள் உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது.

விசாரணையின் முடிவில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலை சவுதி அரேபிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.