March 27, 2023

சவுதி வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம்!

சவுதியின் இளவரசராக முகமது பின் சல்மான் சமீபத்தில் பதவியேற்ற பின் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் சவுதி அரேபியா அளிக்கப்பட்டது. ஆனாலும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப் பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக இளவரசி ரிமா பிண்ட் பாண்டர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான தூதராக ,சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் இருந்தார். தற்போது அவர் நாட்டின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பத்திரிக்கை யாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா – சவுதி இடையேயான உறவு பாதிக்கப் பட்டது. தற்போது அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பதவி வகிக்கும் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இணைத்துப் பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவுதி அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியா நாட்டு உளவுத் துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கான சவுதி தூதராக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பதவி வகித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா சவுதி அரேபியாவில் செய்துவரும் சில பொதுச்சேவைகளால் அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.