September 25, 2022

இந்திய சினிமாவின் முகம் சத்யஜித் ரே!

வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிலரது வாழ்க்கை பாடமாக அமையும்.. அப்படி சினிமாவில் அக்சீவ் செய்ய முடிவு செய்த ஒவ்வொருவருக்கும் பாடமாக விளங்குவது சத்யஜித் ரே வாழ்க்கை. ஆம்.. நம் நாட்டின் திரையுலக மேதையக்கும் அப்படீன்னு புகழப்படும் சத்யஜித் ரே ஓர் ஓவியர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என ஏகப்பட்ட முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர்.

சர்வதேச அளவில் சிறந்த இயக்குநராக தன்னை வெளிப்படுத்தி, உலகளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த முதல் இண்டியன் கிரியேட்டர்.

இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

1921ம் ஆண்டு மே மாதம் 2ம் நாள் சுகுமார் ராய் சுமத்ரா தம்பதியினருக்கு மகனாக சத்யஜித் ரே பிறந்தார்.மிகச் சிறுவயதிலேயே தந்தையை இழந்த சத்யஜித் ரே தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பட்டம் பெற்ற ரே சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியம், வரைகலை, வண்ணம் தீட்டுதல், சிலை செதுக்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக்கொண்டார்.

ஒரு பிரிட்டிஷ் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ரே பின்னர் பதிப்பகம் ஒன்றில் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பாளராகப் பொறுப்பேற்றார். ஜிம் கார்பட் எழுதிய புத்தகங்கள், ஜவாஹர்லால் நேரு எழுதிய இந்தியாவைக் கண்டுணர்தல் (Discovery of India) போன்ற புத்தகங்களின் அட்டைப்படங்களை வடிவமைத்தார். அப்போதுதான் . இத்தாலி நாட்டுத் தயாரிப்பான ‘சைக்கிள் திருடன்’ என்ற திரைப்படம்தான், ரேயின் வாழ்க்கையையே மாற்றியது. ` `சைக்கிள் திருடன்’போல வாழ்க்கையில் ஒரு திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும்’ என்ற இலக்கோடு இந்தியா திரும்பினார் ரே.

பிரபல வங்க எழுத்தாளர் விபுதி பூஷண் பந்தியோபதெயே எழுதிய ‘பதேர் பாஞ்சாலி’ என்ற கதையை விலைக்கு வாங்கினார். அதைப் படமாக்குவதற்காக ரே பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. எந்தத் தயாரிப்பாளரும் அவரது முயற்சிக்கு ஆதரவு தரவில்லை; பலர் கேலிசெய்தர். மனம் தளராத ரே, தன் நண்பர்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கி கனு பானர்ஜி, கருணா பானர்ஜி, சுபிர் பானர்ஜி, உமா தாஸ்குப்தா, சன்னிபாலா தேவி, ரேபா தேவி போன்ற கவனம் பெறாத நடிகர்களைக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார்.

அரைகுறையாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன், `இந்தப் படம் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்’ எனக் கூறி, நிதி உதவி செய்தார். வங்க அமைச்சர் பி.சி.ராய், படத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி, ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார்.

1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’, 1955-ம் ஆண்டில் பல்வேறு இன்னல் களுக்கிடையே முடிவடைந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆயினும், திரைத் துறை, எழுத்துத் துறை சார்ந்த பல ஆளுமைகள் ரேயின் முயற்சியைப் பாராட்டினர் . ஹாலிவுட் இயக்குநர் ஜான் ஹஸ்டன் ஏற்பாட்டில் அமெரிக்காவில் உள்ள ‘இந்தியப் பொருட்காட்சிச் சாலை’ -யில் படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அமெரிக்கர்கள், ரே-யைக் கொண்டாடினர். கேன்ஸ் திரைப்பட விழா, சான்ஃப்ரான்சிஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப் பட விழாக்களில் `பதேர் பாஞ்சாலி’ திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்தது. குறிப்பாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் `மனித வாழ்வின் நிறங்களை ஆவணப் படுத்தியுள்ள சிறந்த படைப்பு’ என அறிவித்து விருது வழங்கப்பட்டது. இந்தப் படம் நியூயார்க் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து ஓடி, புதிய சாதனையைப் பதிவுசெய்தது.

திரைப்படங்களைத் தாண்டி, வங்காள மொழியின் சிறுவர் இலக்கியத்திற்கும் ரே பெரும் பங்காற்றியுள்ளார். ப்ரொதோஷ் சந்திரா மித்ரா என்ற துப்பறிவாளர், பேராசிரியர் ஷான்கோ என்ற அறிவியலாளர் என்ற பாத்திரங்களை உருவாக்கி பல சிறுவர் கதைகளையும் இவர் எழுதி உள்ளார். வங்காள மொழியில் எழுத்துருவங்களை உருவாக்குவதிலும் ரே தலைசிறந்து விளங்கினார்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் திரைப்படத்துறையில் ரேயின் பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பாரத்ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. வாழ்நாள் சாதனையாளர் என்று இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகமும், டெல்லிப் பல்கலைக்கழகமும் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கின. இதுபோக இந்திய அரசின் திரைப்பட விருதுகளும், உலக அளவின் சிறந்த சினிமாவுக்கான பல்வேறு விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் உலகளவில் இந்திய சினிமாவின் முகம் சத்யஜித் ரே என்றால் அது மிகையல்ல