September 20, 2021

சசிகலா-வின் கணவர் நடராஜன் மரணம்

மறைந்த ஜெ.யின் தோழி வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதியபார்வை’ இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதன் பின்னர் உடல்நலம் தேறிய நடராஜனுக்கு மருத்துவமனையிலேயே ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நடராஜனுக்கு, கடந்த 17ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட நோய்தொற்றிற்காக தீவிர சிகிச்சை பிரிவில், நடராஜனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், நள்ளிரவு 1.35 மணியளவில் நடராஜனின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, எம்பார்மிங் செய்வதற்காக, அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில், இன்று காலை 11 மணி வரை நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக நடராஜன் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள விளாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தஞ்சாவூர் அருகே உள்ள விளார் என்னும் கிராமத்தில் கடந்த 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நடராஜன் பிறந்த இவருக்கு. மாணவர் பருவத்திலேயே தமிழில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால் 1965 ஆண்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். கல்லூரி காலத்திலேயே தஞ்சாவூரில் மாணவர்களை திரட்டி பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். மேலும் அந்த இந்தி திணிப்பு போராட்டத்தின்மூலம் அண்ணாவின் கவனத்தை நடராஜன் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றினார்.

இதையடுத்து, தென்னாற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகா ஐஏஎஸ் உடன் அறிமுகமானார். . சந்திரலேகா ஐஏஎஸ் அறிமுகத்தின் மூலம், ஜெயலலிதாவின் அறிமுகம் ஏற்பட, எப்போதுவேண்டுமானாலும் போயஸ்கார்டனுக்கு நடராஜனோ சசிகலாவோ வந்து செல்லும் சுதந்திரம் தரப்பட்டது.

ஒருகட்டத்தில் போயஸ்கார்டனிலேயே வசிக்கத் தொடங்கினார் சசிகலா. நடராஜன் மட்டும் புறக்கணிக்கப்பட்டர். ஆனாலும் அதிமுக கட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, நடராஜனின் செல்வாக்கு எப்போதும் ஓங்கியே இருந்தது. எம்ஜிஆர் இறந்த பிறகு தொடங்கிய நடராஜனின் மறைமுக அரசியல், ஜெயலலிதா இறக்கும் வரை நீடித்தது என்றுதான் சொல்லவேண்டும்.

நடராஜனை யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என்று பலமுறை ஜெயலலிதா விட்ட அறிக்கைகள் ஒருபக்கம் இருந்தாலும் நடராஜன், சசிகலா, ஜெயலலிதாவுக்கான தொடர்புகள் இருந்து வந்தன என்பது ஊரறிந்த ரகசியம்