January 29, 2022

எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம் !- சசிகலா பேச்சு

முன்னாள் முதலவர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார்.

sasi dec 31

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக புதிய பொதுச்செயலாளராக சசிகலா இன்று பதவியேற்றார். பதவியேற்பின் போது முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்று 12.20 மணிக்கு புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து தொண்டர்களை அழைத்து வந்தனர்.

மேலும் சசிகலா வரும் வழிநெடுக பேனர் மற்றும் கட்அவுட்களும் வைக்கப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகம் வந்ததும், அந்த வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா முதலில் மாலை அணிவித்தார். இதற்காக எம்ஜிஆர் சிலை இருக்கும் பகுதியில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் சென்ற சசிகலா அங்கு பொதுச்செயலாளர் அறையில் பொறுப்பேற்று கொண்டார்.

நேரடி அரசியலுக்கு வந்துள்ள சசிகலா மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில் நடை, உடை, சிகை அலங்கார முறைகளை மாற்றியிருந்தார். அதாவது ஜெ போலவே பச்சை நிறப் புடவை! ஜெ போலவே  வட்டப் பொட்டில் ஐயங்கார் திருச்சூர்ணம்!ஜெ போலவே ஏற்ற இறக்கமான அமர்த்தலான பேச்சு நேற்று வரை இருந்த ஹேர் ஸ்டைல் இன்று காணோம். அதுவும் ஜெ வழியில் கிளிப் போடப்பட்ட சிறு கொண்டையுடன் அசத்தலாக ஜெ வை நகலெடுத்தவராக இருக்கிறார் சசி! அத்துடன் ஜெயலலிதா கட்சி அலுவலகம் வரும்போதெல்லாம் முதல் தளத்தில் நின்று கொண்டு கீழே நிற்கும் தொண்டர்களுக்கு கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவிப்பார். அதேபோல் சசிகலாவும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவுடன் முதல் தளத்தில் நின்று இரு கை கூப்பி தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

இதையடுத்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா பேசுகையில், “தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

அதிமுக தொண்டர்களுக்கு எல்லாமுமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு ஜெயலலிதாவுடன் நான் சென்றிருக்கிறேன். ஆனால் இன்று.. (அப்போது சசிகலா கண்ணீர் வடித்தார்). 33 ஆண்டுகளில் ஜெயலலிதா இல்லாமல் பங்கேற்பது முதல் நிகழ்ச்சி என்பதால் வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதாவை மீ்ட்டெடுக்க 75 நாட்கள் கடுமையாக போராடினோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவின் மறைவு கற்பனையிலும் நினைக்காத ஒன்று. எனது வார்த்தையை கற்பனையிலும் நினைத்திராத ஒன்று.

நல்ல உடல்நிலை தேறி வந்தநிலையில் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்துவிட்டது. எனது வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தேவதையில்லாத அரசியல் மாடம் களையிழந்துவிட்டது. ஜெயலலிதாவின் அரசியல் பிரசேவம் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தது. எனது 29-வது வயதில் இருந்து ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். ஜெயலலிதா காட்டிய வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம், அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம். உங்கள் அன்புக் கட்டளையை ஏற்கின்ற கட்டாயமும், கடமையும் எனக்கு இருக்கிறது. எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம். கோடான கோடி கழக கண்மணிக்களுக்காகவும் நான் மீதம் உள்ள வாழ்வை கழிக்க கடமைப்பட்டிருக்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள். எனக்கு அம்மா தான் எல்லாம். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நம்மை பின்பற்றும் அளவுக்கு கழகத்தை வழிநடத்துவோம்” என்று பேசினார்.