அதிமுகவிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கம்!

அதிமுகவிலிருந்து சசிகலா புஷ்பா நீக்கம்!

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். 2014-ல் எம்.பி. ஆன சசிகலா புஷ்பாவுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

pushba aug 1

மாநிலங்களவையில் கண்ணீர் மல்க பேச்சு:

இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, “நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை” என்றார்.ஆனால், தொடர்ந்து அவர் பேச முடியாத அளவுக்கு அவையில் அமளி நீடித்ததால், அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சசி கலா புஷ்பா: அன்று முதல் இன்று வரை..

தூத்துக்குடி மாவட்டம், முதலூரரை அடுத்த அடையல் கிராமத்தை கிராமத்தை சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. குறுகிய காலத்தில் அதிமுகவில் அசுர வளர்ச்சி கண்டவர் இவர்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயளாலர், தூத்துக்குடி நகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர் என கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாக இருந்து வந்தது.

இவர் தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், இதன் காரணமாக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார், மேலும் அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்
சசிகலா புஷ்பா. எந்த அளவுக்கு இவரின் வளர்ச்சி இருந்ததோ அதே அளவுக்கான சர்ச்சைகளிலும் சிக்கினார் இவர்.

பூதமாக உருவெடுத்த புகைப்படங்கள்:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருப்பது போலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பரவி வந்தது. எனினும் இது குறித்து சசிகலா புஷ்பாவின் கணவர் அது கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டவை என விளக்கம் அளித்திருந்தார்.

அதிர்ச்சியை கிளப்பிய ஆடியோ:

தனது ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா, பேசும் ஆடியோவில் தூத்துக்குடியில் அதிமுக தோற்கும் என்றும் தான், போதையில் இருப்பதாகவும் கூறுகிறார். அந்த ஆடியோ மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

திருச்சி சிவாவுக்கு அறை!

ஏற்கெனவே, திருச்சி சிவாவுடன் புகைப்பட சர்ச்சை கிளம்பிய நிலையில், மீண்டும் கடந்த சனிக்கிழமை (30.07.2016) அன்று மதியம் டெல்லி விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததாக புதிய சர்ச்சை வெடித்தது.

ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ததன் காரணமாக திருச்சி சிவாவை தாக்கியதாக சசிகலா புஷ்பா விளக்கம் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியது.

கட்சியிலிருந்து நீக்கம்:

இந்நிலையில் கட்சியில் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

பதவி விலகப்போவதில்லை:

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை மாநிலங்களவைவில் முன்வைத்த சசிகலா. கட்சியின் தலைமை தன்னை பதவி விலக நிர்பந்திப்பதாகவும், எனினும் கட்சிக்கு என்றுமே விசுவாசத்துடன் இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார் சசிகலா, மேலும், 2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!