September 29, 2021

”சசிகலா என்னும் நான் ..” – ‘கைதி எண்: 9234’ – ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்!

வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதிசெய்து செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்டது.மூவரும் உடனடியாக பெங்களூரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் புதன்கிழமை மாலை 5.15 மணிக்கு வந்தனர். 15 நிமிடங்கள் கழித்து சிறப்பு நீதிபதி அஸ்வத் நாராயணா வந்தார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரம் தெரியுமா? என இருவரிடமும் நீதிபதி கேட்டார். தெரியும் என இருவரும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களிடம் சரணடைவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன.படிவங்களை நிரப்பி அளித்த இருவரையும் இதே வளாகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார் நீதிபதி.

sasi feb 16

மருத்துவப் பரிசோதனையின் முடிவில், சசிகலா தரப்பில் இருந்து நீதிபதியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் கோர்ட்டில் சரண் அடைவதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டு சாப்பாடு வேண்டும். அரசியல் தலைவர் என்பதால் எங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை வழங்க வேண்டும் என்றனர். அதற்கு நீதிபதி 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு முதல் வகுப்பு அறை வசதி வழங்கப்படுகிறது. 10 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு பி பிரிவு அறை வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் சிறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.

பின்னர் சர்க்கரை நோயாளி என்பதால் மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஆகையால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றனர். சிறையிலேயே அனைத்து வகையான மருந்து மாத்திரைகள் கிடைக்கும். அதையே நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். இதையடுத்து உறவினர்களுடன் பேச வேண்டும் என்று கூறிவிட்டு சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியில் வந்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கணவர் நடராஜன் மற்றும் உறவினர்களுடன் பேசினார். அப்போது சசிகலா, தனது கணவர் நடராஜனை பார்த்து கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் இருவரையும் சிறையில் அடைப்பதற்கான ஆவணங்களை பெண் காவலர்களிடம் நீதிபதி அஸ்வத் நாராயணா வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக இருவரும் இதே வளாகத்திலுள்ள பெண்கள் சிறைக்கு மாலை 6.30 மணிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை சிறைத்துறையின் பெண் காவல் அதிகாரி சிறைக்கு அழைத்து சென்றார். சிறையில் பயன்படுத்த கூடிய வெள்ளை நிறத்தில் நேவி புளு பார்டர் உள்ள 3 சேலைகள், சாப்பிடுவதற்கு தட்டு, டம்ளர், ஒரு போர்வை ஆகியவற்றை வழங்கினார். சசிகலாவுக்கு கைதி எண்: 9234, இளவரசிக்கு கைதி எண்: 9235, சுதாகரனுக்கு கைதி எண்: 9236 வழங்கப்பட்டுள்ளது.இப்போதைக்கு இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு அறைகளே வழங்கப்பட்டுள்ளன. மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படவில்லை, கட்டில் மட்டும் வழங்கப்படும் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே , மாலை 6.37 மணிக்கு சுதாகரன் சிறப்பு நீதிமன்றத்துக்குள் வந்தார். ஏன் தாமதம்? என நீதிபதி கேட்டதற்கு, பெங்களூரு நகருக்குள் வழி தெரியாமல் தாமதமானதாக சுதாகரன் தெரிவித்தார்.மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு மாலை 6.50 மணிக்கு சுதாகரனும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

maxresdefault

முன்னதாக சசிகலா போயஸ் இல்லத்தில் வைத்து ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெயலலிதா சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து, தனது வாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். ஜெயலலிதா செய்த சபதம் என்ன என்பதை அதிமுக டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது. “சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார்.” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். சுதாகரன் தனியாக காரில் சென்றார்.