சசிகலாவிடம் விசாரணை மேல் விசாரணை மேலும் விசாரணை!

சசிகலாவிடம் விசாரணை மேல் விசாரணை மேலும் விசாரணை!

அதிமுக வின் சுப்ரீமோவாக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிப்பது தொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அது போல் வருமான வரி துறை விசாரணைக்கு அனுமதி கிடைத்து விட்டது. கூடவே அந்நிய செலவாணி மோசடி வழக்கில் கோர்ட் விசாரணைக்கு சென்னை வர இருக்கிறார் சசிகலா.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஜெ மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக இந்த விசாரணை ஆணையம் முன்பாக 100க்கும் அதிகமானோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் என பல தரப்பிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அப்போலோ மருத்துவமனையிடம் ஜெ அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை, கேட்டதும், அந்த பதிவுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் நான்காவது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் நீட்டிக்கப்பட்ட நிலையில் விசாரணையை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு மருத்துவர் சிவக்குமாரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும், அவருடன் உடனிருந்த சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எனவே சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்து, இதற்காக, தமிழக உள்துறைக்கும், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கும் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தின ருக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இதுதொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால், அவர் மவுன விரதம் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போனது. இதை தொடர்ந்து, அண்மையில், பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியது.

இதற்கு, தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், வருகின்ற 13 மற்றும் 14-ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அது மட்டுமின்றி தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்தாக அந்நிய செலாவணி மோசடி பிரிவில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று ம் வரும் 13ம் தேதியே நேரில் அழைத்து வர வேண்டும் எனவும் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!