பாரத் கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) சரோஜினி நாயுடு!

விக்குயில் சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆந்திராவில் ஐதராபாத்தில் அகோரநாத் என்பவருக்கு 1879-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி மகளாகப் பிறந்தார். மிகத் திறமையாகப் படித்து தமது 12-வது வயதிலேயே மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றார். பின்னர் வீட்டிலேயே தந்தையிடம் பயின்றார். இவர் தமது 12-வது வயதிலேயே ‘மெஹர் முனீர்’ என்ற கவிதையை எழுதினார். தந்தையின் நண்பர்களில் ஒருவரான மருத்துவர் கோவிந்தராஜு நாயுடுவை இவருக்குப் பிடித்திருந்தது. ஆனால் சரோஜினியின் பெற்றோர் இவரை மேல் நாட்டிற்கு அனுப்பி தந்தையைப் போல கணிதம் கற்பிக்க எண்ணினர். சரோஜினி பாரசீகத்தில் எழுதிய சிறிய நாடகத்தைப் பாராட்டி ஐதராபாத் நிசாம் பரிசாக அளித்த 300 பவுண்டுகளை கொண்டு இவரது பெற்றோர் இவரை இங்கிலாந்திற்கு கணித மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தனர். லண்டன் மாநகரின் இயற்கை அழகிலும், அங்கு பூத்துக் குலுங்கிய மலர்களின் அழகிலும் மயங்கிய இவரது மனம் கணிதப் பாடத்தில் லயிக்கவில்லை. கவிதைகள் எழுதினார். கணிதம் வசப்பட வில்லை எனினும் ஓர் அருமையான கவிஞராக மாறினார். இவரது ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து இங்கிலாந்தில் ஆங்கிலேயரே வெளியிட்டனர்.

இங்கிலாந்தின் பருவநிலை இவருக்கு ஒத்து வராததால் நாடு திரும்பினார். எனினும் மருத்துவர் கோவிந்த ராஜு நாயுடுவை மறக்கவில்லை. 1898-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி திருமணம் நடந்தது. சாதி மறுப்புத் திருமணம் என்பதால் உறவினர்களின் ஒத்துழைப்பு இல்லை. மும்பை யில் குடியேறினார். இக்காலகட்டத்தில் ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்தார். ‘கவியரசி’, ‘கவிக்குயில்’ என்று பாராட்டப்பட்டார். ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு ‘கெய்சரிஹிந்த்’ என்ற பதக்கத்தை அளித்துப் பெருமை கொண்டது. இவரது கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில, த.கோல்டன் திரஷோல்ட், த பெர்ட் ஆப் டைம், த புரோக்கன் விங், த பெதர் ஆப் டான். மேலும் பல்லக்குத் தூக்குவோர், தனிமையான குழந்தை, ராதாவின் பாடல், பால்காரி ராதா, கைபர் கணவாயின் பாடல் போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. இவரது கவிதைகளால் ஈர்க்கப் பட்ட காந்தியடிகள் இவரை ‘பாரத் கோகிலா’ என்று பாராட்டினார்.

விடுதலை இயக்கத்தில் இவரது பங்கு போற்றுதலுக்குரியது. காந்தி, நேரு, தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட் ஆகிய தலைவர்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், ஆங்கிலேயரிடமிருந்து இந்திய விடுதலை, இந்து, முஸ்லிம் ஒற்றுமை ஆகியவற்றை குறிக்கோள்களாக கொண்டவர். 1902-ம் ஆண்டு சென்னையில் நடந்த சமூக சீர்திருத்த மாநாட்டிலும், 1906-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடை பெற்ற கூட்டத்திலும், 1908-ம் ஆண்டு மும்பையில் இஸ்லாமிய மாதர்கள் அதிகமாகக் கலந்துகொண்ட கூட்டத்திலும் சொற்பொழிவாற்றினார். 1917-ம் ஆண்டு அன்னிபெசன்ட் கைதானபோது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசினார்.

மும்பையில் மகளிர் அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் துணைத்தலைவராக செயல்பட்டார். 1930-ம் ஆண்டில் இதன் கிளையாக தேசசேவிகா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உப்பு அறப்போரில் கலந்துகொண்டனர். 1918-ம் ஆண்டு அன்னிபெசன்ட், ஹிராபாய் டாட்டா, மிதிபாய் டாட்டா ஆகியோருடன் இணைந்து சரோஜினி நாடாளுமன்ற நிலைக்குழுவை இங்கிலாந்தில் சந்தித்து இந்தியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட ராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து ஆவேசமாக இவர் பேசினார். ஆங்கிலேய அரசு அளித்த கெய்சரிஹிந்த் பதக்கத்தைத் திருப்பி அனுப்பினார். 1922-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கானாட்டுக் கோமகனார் ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டார். அப்படி ஒரு சூழலை சரோஜினியின் சொற்பொழிவு உருவாக்கியது. 1925-ம் ஆண்டு கான்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். காங்கிரஸ் மாநாட்டில் தலைமை ஏற்ற முதற் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். இதேபோல அமெரிக்காவில் 1928-ம் ஆண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலக அளவில் இங்கிலாந்து அரசின் பொய்யான முகத்திரையை கிழித்தார்.

உப்பு அறப்போரில் பெண்கள் பங்கு கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்த காந்தியடிகளின் முடிவை மாற்ற வைத்தவர். சூரத் நகரின் தர்சண கடற்கரையில் உப்பு அறப்போருக்குத் தலைமை தாங்கி அமைதியான முறையில் தினமும் 5000 போராளிகள் என்று களமிறக்கியவர்.

1930 மே 21-ந் தேதி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார். உடலுக்குத் தானே சிறை தண்டனை? உள்ளம் சுதந்திரமாகக் கவிதைகள் பாடியது. ஏராளமான பூச்செடிகளை வளர்த்து அவை பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்டு ரசித்தார். விடுதலை நாளும் வந்தது. மேலும் பல செடிகள் பூக்கும் தருவாயில் இருந்தன. அவற்றையும் காண விழைந்த சரோஜினி விடுதலை நாளை தள்ளிப்போட அனுமதி கேட்டார். இப்படியும் ஒரு தலைவர். அனுமதி கிடைத்து பூக்கள் பூத்துக் குலுங்கிய காட்சியைக் கண்ட பிறகே சரோஜினி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

1931-ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பெண்கள் பிரதி நிதியாகக் கலந்துகொண்டார். 1940-ம் ஆண்டு தனிநபர் அறப்போரில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு சிறை சென்றார். சிறையில் இவரது உடல்நிலை குன்றியதால் விடுதலை செய்யப்பட்டார். இதை விரும்பாத சரோஜினி மீண்டும் தனிநபர் அறப்போரில் ஈடுபட முயன்றார். அப்போது காந்தியடிகள் தடுத்து நிறுத்தினார். 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியதுமே தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சரோஜினியும் கைது செய்யப்பட்டார் 1944-ம் ஆண்டு கஸ்தூரிபாய் இறந்ததும் அவரது நினைவாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 31 லட்சம் சரோஜினி தேவி வசூல் செய்துகொடுத்தார்.

விடுதலை பெற்ற இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான். 1949-ம் ஆண்டு இதே மார்ச் 2 இல் தமது 70 ஆவது வயதில் காலமானார். இவரது கவிதைகளும், தாய்த் திருநாட்டிற்கு இவர் ஆற்றிய தொண்டும் நிலைத்து நின்று இவரது புகழ்பாடும்.

aanthai

Recent Posts

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

3 hours ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

8 hours ago

அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை சுரேஷ் காமாட்சி ரிலீஸ் செய்கிறார்!

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம்…

9 hours ago

நல்ல கலை இயக்கம் என்பது வெளியே தெரியாமல் இருப்பதுதான்: கலை இயக்குநர் வீரசமர்!

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் 'காதல்' திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் 'வெயில்', 'பூ',…

9 hours ago

கனெக்ட் படத்தில் என்ன ஸ்பெஷல்? – டைரக்டர் அஸ்வின் சரவணன் பகிர்ந்தவை!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்…

1 day ago

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டம்?

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள்…

2 days ago

This website uses cookies.