February 8, 2023

ந்திய அரசமைப்புச் சட்டம் “சட்டத்தின்படியான ஆட்சியை” குடிமக்களாகிய நமக்கு உறுதி செய்துள்ளது. மேலும் அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது சுகாதாரமான குடிநீரை உள்ளடக்கியதே என்று இந்திய உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. அந்த வகையில் தண்ணீர் தனியார்மயமாகுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும் என்றாலும் தமிழகம் தொடங்கி பல நாடுகளில் தண்ணீர் விநியோகத்தை தனியார் வசம் கொடுப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தப் போக்கு அதிகரித்தால் என்ன ஆகும்? அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் விளைவுகள் என்னென்ன? இப்போது கோடிக்கணக்கில் புழக்கும் கேன் மற்றும் பாட்டில் தண்ணீரால் கேன்சர் உள்ளிட்ட கொடூர நோய்கள் உருவாக்க உள்ள வாய்ப்பு போன்றவற்றை கொஞ்சம் காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்பு பொடிகள் கலந்து சர்தார் என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்.

கதை என்னவென்றால் தேசத் துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டவரின் மகன் நாயகன் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டரான நிலையில் தேசத்துரோகியின் மகன் என்னும் அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ட்ரெண்ட் ஆ(க்)க மெனக்கெடும் கேரக்டர் கொண்டவர். இவரிடம் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட லைலா மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கு வந்த நிலையில் அதை விசாரிக்க தொடங்கும் போது. அதன் பின்னணியில் பல மர்மமான விஷயங்கள் இருப்பது தெரிய வருகிறது. அதாவது நாடு முழுவதும் குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்து தனி அரசாங்கம் நடத்த முற்படும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், தேசத் துரோகி என முத்திரை குத்தப்பட்ட லைலா தொடங்கி தனது அப்பா சர்தார் பற்றி ரகசியங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் சர்தார் கதை.

சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி அப்பா & மகன் எப்று டபுள் ரோலில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், எமோஷன் என தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் கார்த்தி. குறிப்பாக இந்தியாவின் உளவாளியாக அதிலும் வயதான கேரக்டருக்குரிய முதிர்ச்சி மற்றும் நடுக்கம், உடல்மொழியை மிகச் சரியாக வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார். மட்டுமின்றி ஓர் உளவாளிக்கான சாகச சண்டைக் காட்சிகள் என ஒரு நடிகராக அப்ளாஸ் பெறுகிறார்

நாயகியாக நடித்திருக்கும் ராஷி கன்னா மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஓரளவுக்கு கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் குறை வைக்காமல் அவர் நடித்திருந்தாலும் அந்தக் கேரக்டர் கதைக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை. சில பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் லைலா. கதையின் முக்கியமான திருப்பத்துக்கு உதவும் ரோல் என்றாலும் அவருக்கும் திரைக்கதையில் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஃப்ளாஷ்பேக் பகுதியில் சர்தாரின் முறைப்பெண்ணாக வரும் ரஜிஷா விஜயனுக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம்தான். அனாதையாக்கப்பட்ட விஜய பிரகாஷை எடுத்து வளர்க்கும் காவலராக வரும் ராமதாஸ், சர்தாரின் லட்சியத்துக்காகத் திரைமறைவிலிருந்து வேலைபார்க்கும் உளவுத் துறை ஏஜென்ட்டுகளாக யூகி சேது, அவினாஷ் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அளவுக்கு பாடல்கள் எடுபடவில்லை.ஆனால் ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமராவும்,  திலிப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகளும்(அந்த வீல் சேர் ஃபைட்  மற்றும் க்ளைமாக்ஸ் சண்டை) விறுவிறுப்பை கூட்டியுள்ளன.

முன்னதாக ஆன் லைன்களால் நிகழும் அவலங்களை சுட்டிக்காட்டிய இரும்புத் திரை திரைப்படத்தை போல இந்த படத்தில் நீர் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அது தனியார் கைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியத்தையும் கொஞ்சம் கேஷூவலாக சொல்லி எச்சரிக்கை செய்ய முற்பட்டிருக்கிறார் இயக்குநர் மித்ரன்..இப்படத்துக்காக உளவுத் துறை ஏஜென்ட்டுகள் தொடர்பான காட்சிகளுக்காகத் தீவிரமான ஆய்வை மேற்கொண்டிருப்பதைத் திரைக்கதையில் காண முடிகிறது. அவை தொடர்பான காட்சிகள் படத்துக்கு மெருக்கேற்றுகிறது..

ஆனால் ஆரம்ப பேராவில் சொன்னது போல் தண்ணீர் தனியார் மயமாக்கப்படுவதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் உளவுத் துறைப் பின்னணியில் அம்பலப்படுத்த முயன்ற இயக்குநர் இதே கதையில் ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்ல முயன்றிருப்பதால் கொஞ்சம் சறுக்கி விட்டதென்னவே நிஜம்

மொத்தத்தில் இந்த சர்தார் – கவனம் ஈர்க்கிறான்

மார்க் 3.5/5,