சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சென்னை சரவணபவனில் வேலை செய்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் அண்ணாச்சி என்ற அடைமொழியை விரும்பிப் போட்டுக் கொள்ளும் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதிசெய்து உத்தரவிட்டு அவர்  கோர்ட்டில் ஆஜராகவும் கெடு விதித்துள்ளது..

சென்னையில் உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் கொஞ்சம் டேஸ்ட்டான உணவைக் கொடுத்து எக்கச்சக்கமான பில் போட்டும் விறு விறுவென வளர்ச்சி அடைந்த சரவண பவன் ஓட்டல் அதிபர் அண்ணாச்சி என்றழைக்கப்படும் ராஜகோபாலுக்கு 2 மனைவிகள் மற்றும் இரண்டு மகன்கள். ஆனாலும் ஏதோ ஒரு சூழலில் கண்ணில் பட்ட ஜீவஜோதியை மூன்றாவது மனைவி யாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இளம் அழகான பெண்ணான் ஜீவஜோதியின் அப்பா சரவணபவனில் உதவி மேலாளராகப் பணி புரிந்து வந்தார். அப்போது சென்னையில் இருந்த ஜீவ ஜோதி டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் உறவினர் பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல் வயப்பட்டார் ஜீவஜோதி. இந்தக் காதல் திருமணத்திலும் முடிந்தது.

பின்னரும் ஜீவஜோதியை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து ராஜகோபால் விலகவில்லை. தொடர்ச்சியாக தொல்லைகளை கொடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் பிரியும்படி மிரட்டியுள்ளார். ஆனால், ஜீவஜோதியும், சாந்தகுமாரும் பிரிய மறுத்துவிட்டனர். இதனையடுத்து சாந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உடையவரான ராஜகோபால், ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொண்டால் இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லலாம் என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இந்தத் திருமணத்துக்குத் தடையாக சாந்தகுமார் இருந்ததாலும், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

இதை அடுத்து 26.10.2001 அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்படுகிறார். இதுதொடர்பாக, வேளச் சேரி காவல்நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளிக்கிறார். அந்தப் புகாரில் ராஜகோபாலின் ஆட்கள், தன்னுடைய கணவரைக் கடத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார். 5 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கொடைக்கானல் மலை ரோட்டில் சடலமாக மீட்கப்பட்டார் பிரின்ஸ். இதையடுத்து, ராஜ கோபாலுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார் ஜீவஜோதி. ஆனால் தொழில் போட்டி காரணமாக யாரோ செய்கின்ற சதி’ என்று ராஜகோபால் தரப்பினர் கூறிவந்தனர். ஆனாலும் இந்தவழக்கில் ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வ நாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கு விசாரணை கீழ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். நடந்த விஷயங்களை விசாரித்த ஐகோர்ட் அந்த 10 தண்டனையை மாற்றி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. உடனே, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜகோபால் மேல் முறையீடு செய்தார். இதன் விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. இதற்கிடையே உடல் நிலையை காரணம் காட்டி ராஜகோபால் ஜாமீன் பெற்று வெளியே இருந்தார்.

அந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இதன்மூலம் அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்படுவார். அவரை ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.