September 23, 2021

மொட்டை கடிதாசு மாதிரி மெசெஜ் அனுப்ப உதவும் புது ஆப் ‘ சரஹா’!

ஏற்கெனவே ஃபேஸ்புக், டவிட்டர், வாட்ஸ் அப்பில் மூழ்கி கிடக்கும் நம்ம இளைசுகளின் கைகளில் நுழைந்துள்ள புது மெசென்ஜர் ஆப் ‘சரஹா’. அது என்ன சரஹா..? யாரு வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் மெஜெஜ் செய்ய முடியும் அதுதான் சரஹா. அதாவது மொட்டை கடிதாசு மாதிரின்னு சொல்லலாம். ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே எகிப்து, சவுதி போன்ற அரேபிய நாடுகளிலும், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் உலாவந்த சரஹா. இப்போது இந்தியாவுக்குள்ளும் நுழைஞ்சிடுச்சு. ‘சரஹா’ மெசஞ்சர் ஆப் 2016-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டாலும், தற்போதுதான் பிரபலமாகி வருகிறது. எகிப்து, சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ‘சரஹா’, இந்தியாவுக்கு வந்ததும் ஆச்சர்யம்தான். சமீபகாலமா ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான சமூக ஊடகங்களின் வழியாகவே ‘சரஹா’ அறியப்பட்டு, தரவிறக்கம் செய்யப்படுகிறது.

 

என்ன சிறப்பம்சம்?

இந்த செயலியின் முக்கிய அம்சமே யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும். நீங்கள் விரும்பும் நபருக்கு, உங்களை வெளிப்படுத்தாமலே கருத்துகளைத் தெரிவிக்கமுடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

‘சரஹா’ தன்னைப் பற்றிக் கூறியிருக்கும் சுய விவரக் குறிப்பைப் பாருங்களேன்: ”ஆக்கபூர்வமான, அநாமதேய கருத்துகளின் மூலம் மக்களை சுய வளர்ச்சிக்கு ஆட்படுத்தும் செயலி சரஹா”.

எப்படி செயல்படுகிறது?

‘சரஹா’ செயலியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். யார் வேண்டுமானாலும் உங்களின் ‘சரஹா’ பக்கத்தைப் பார்க்க முடியும்; குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். இதற்காக அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் பயனர்கள், தன் பெயரை வெளிப்படுத்தவும் முடியும்.

செய்திகளைப் பெறும் பயனர்களின் இன்பாக்ஸில் மற்றவர்கள் அனுப்பிய செய்திகள் நிறைந்திருக்கும். அவற்றுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். முக்கியக் குறியிட்டு வைத்துக் கொள்ளலாம் அல்லது நீக்கியும் விடலாம்.

இயங்குதளம் மற்றும் மொழி

ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் ‘சரஹா’ செயலியைப் பயன்படுத்த முடியும். தற்போது ஆங்கிலம் மற்றும் அரபுஆகிய மொழிகளில் மட்டுமே ‘சரஹா’ செயல்படுகிறது.

விமர்சனங்கள் எப்படி?

இந்த செயலி இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தாலும், ப்ளே ஸ்டோர் பகுதியில் செயலி குறித்த நேர்மறை மற்றும் எதிர்மறைப் பின்னூட்டங்கள் சரிவிகித அளவில் இருக்கின்றன.

அதில், பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் குறித்த தன் சொந்தக் கருத்துகளை முன்வைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் எனவும், இந்த வழிமுறை புண்படுத்தும் விதமான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ப்ளாக் வசதி

அதே நேரத்தில் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் சில தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தேடுதலில் உங்களின் ப்ரொஃபலை நீக்க வழி உள்ளது. இதன்மூலம் செயலியில் தங்கள் பெயர் கொண்டு நுழைந்தவர்கள் மட்டுமே பின்னூட்டம் இட முடியும். அத்துடன் நீங்கள் காண விரும்பாத நபரின் பக்கத்தை ப்ளாக் செய்யும் வசதியும் இருக்கிறது.

ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் ‘சரஹா’ ஆப்பை பயன்படுத்த முடியும். மேலும் டெஸ்க்-டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் ‘சரஹா’ – வை பயன்படுத்தலாம். என்ன ஒன்னு இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் மட்டுமே ‘சரஹா’ செயல்படுகிறது.