February 7, 2023

ழிவற்றவன் என்ற பொருளைத் தரும் சஞ்ஜீவன் என்ற பெயரில் ரிலீஸாகி இருக்கிறது ஒரு படம். அதிலும் விளையாட்டு வினையாகும் என்ற சொல்லுக்கு எடுத்துகாட்டாகவும் விபத்துகளுக்கு நல்லவர் கெட்டவர் தெரியாது என்பதையும் சொல்ல வந்திருக்கும் படமிது. அதிலும் இயக்குனர் மணிசேகர் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்துள்ளார். இடைவேளை வரை காதல், மோதல் என இளம் தலைமுறையினர் ரசிக்கும் படியாக படத்தை கொண்டு சென்று பின்னர் குடியால் ஏற்படும் பாதிப்புகளை  கூறியதன் மூலம் யோசிக்க வைத்துள்ளார்.

கதை என்னவென்றால் ஹீரோ வினோத் லோகிதாஸூக்கு, சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகியோர் குளோஸ் ஃப்ரண்ட்ஸ். ஹீரோ ஸ்நூக்கர் விளையாட்டொன்றில் வெற்றி பெறுகிறார். அதனை கொண்டாடுவதற்காக நண்பர்கள் ஏற்காடு சுற்றுலா செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா?, இல்லையா? என்பதை ஜாலியாகவும், பரபரப்பாகவும், சோகமாகவும் சொல்வது தான் ‘சஞ்ஜீவன்’.

நண்பர்களாக நடித்திருக்கும் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஐந்து பேரும் படம் முழுவதும் வருகிறார்கள். வினோத் லோகிதாஸுக்கு ஜோடி இருப்பதால் அவரை கதையின் நாயகன் என்று சொல்லலாம். இருந்தாலும், ஐந்து நடிகர்களும் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரங்களாக இருப்பதோடு, இயல்பாக நடித்து உண்மையான நண்பர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

காஸ்ட்யூம் டிசைனராக வரும் சத்யா என்.ஜே, நடிகராக ஜொலித்திருக்கிறார். காமெடியான தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்து நம்மை சிரிக்க வைக்கிறார். காதலிக்கும் பெண் எப்படிப்பட்டவள் என்று தெரியாமலேயே உருகி உருகி காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கும் ஷிவ்நிஷாந்த், படம் முழுவதும் ஜாலியாக இருப்பதோடு, தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். முரட்டுத்தனமான குணம் கொண்ட ரோலில் நடித்திருக்கும் யாஷின் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அதிலும், போதைப்பொருள் என்று நினைத்து அவர் வாங்கிய பொருளும், அதை வைத்துக்கொண்டு போலீஸில் சிக்குவதும் செம ரகளை.

கேமராமேன் கார்த்திக் ஸ்வர்ணகுமார் கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்ட விதம் மிரட்டும் வகையில் இருக்கிறது. , எடிட்டர் ஷிபு நீல், இசையமைப்பாளர் தனுஷ் மேனன் பங்களிப்பும் நிறைவாக இருக்கிறது.

இண்டர்வெல் வரை நண்பர்களின் நட்பு, கேலி, கிண்டல், சிறு சிறு மோதல், அவர்களுக்குள் இருக்கும் காதல் ஆகியவற்றுடன் ஸ்நூக்கர் போட்டியில் வினோத் கலந்து கொள்வது தோற்பது, வெற்றி பெறுவது என இன்றைய இளம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு ஒரு ஈடுபாட்டுடன் கூடிய மேக்கிங்கைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் இரண்டாவது பாதியில் அதைப் போலவே, அதன் தொடர்புடைய காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தால் ஏமாற்றமடைய வைக்கிறார். இரண்டாம் பாதியில் ‘குடி’யால் ஏற்படும் பாதிப்பு தான் காட்சிகள் என்றாலும் அதை அழுத்தமாக உணரும்படி கொடுக்காததால் ஏமாற்றமாகி விடுகிறது.

மொத்தத்தில் வினையாகிப் போன விளையாட்டை அசால்ட்டா சொல்லி இருக்கிறது.

மார்க் 3/5