சானிட்டரி நாப்கின் விலை ரூ 1 மட்டுமே! -மத்திய அரசு அதிரடி!!

மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிடரி நாப்கின்களின் விலையை ரூ. 2.50-இல் இருந்து ரூ.1-ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் நலத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் நலனில் தனி முக்கியதுவம் கொடுத்து வருகிறது.அதில் ஒன்றாக பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 1 ரூபாய்க்கு, ‘சானிட்டரி நாப்கின்’கள் விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா, டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய போது, “ பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும், மத்திய அரசால், ‘ஜன் அவுஷாதி’ எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

நான்கு நாப்கின்கள் அடங்கிய பாக்கெட், தற்போது, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இனி, 4 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும், வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில், இதுவும் அடக்கம். என கூறினார்.

மக்கள் மருந்தகங்களில் கடந்த ஓராண்டில் 2.2 கோடி சானிடரி நாப்கின் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.