October 16, 2021

சங்கிலி புங்கிலி கதவத் தொற – விமர்சனம்!

கோடை விடுமுறையில் குழந்தைகள் குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்பதற்க்காகவே எடுக்கப்பட்ட படம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. பேய் + காமெடி சப்ஜெக்ட் என்று பில்ட் அப் கொடுத்திருந்தாலும் இந்த இரண்டையும் மிஸ் பண்ணி விட்ட இயக்குநர் அடுத்த படத்தில் தன்னை சரி செய்து கொள்வார் என்று நம்பலாம்.

பழைய வீடு வாங்க/ விற்க உதவும் தொழிலான ரியல் எஸ்டேட் புரோக்கரான ஜீவா ஏதாவது ஒரு காரணத்தால் விலை போகாத வீட்டை வாங்கி அதை ராசியான வீடாக்கி எக்ஸ்ட்ரா விலைக்கு விற்பதில் எக்ஸ்பர்ட். அதன் மூலம் கிடைத்த வருவாயில் தன் ஆசை அம்மாவின் நீண்டநாள் கனவான சொந்த வீடு வாங்கிக் கொடுக்கும் லட்சியமும் ஜீவாவுக்கு உண்டு. அதற்கேற்றவாறு ஜமீன் பங்களா ஒன்றில் பேய் குடியிருப்பதாக பொய் சொல்லி அதை அடிமாட்டு ரேட்டுக்கு தனக்கென வாங்குகிறார்..

உடனே அம்மா ராதிகா, இதுநாள் வரை தனக்கு அடைக்கலம் கொடுத்த தாய்மாமன் இளவரசு குடும்பத்தினருடன் அந்த பங்களாவில் ஜீவா குடியேற, சரியாக அதே நாளில் தம்பிராமையாவும் மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யாவுடன் இந்த பங்களா எனக்குத்தான் சொந்தம் என பங்காளி மூடோடு வந்து மல்லுக் கட்டுகிறார்.. அதனால் எழும் பஞ்சாயத்தின் முடிவில் தம்பி ராமையாவின் குடும்பமும் அதே பங்களாவில் செட்டிலாகிறார்கள்

இதனிடையே பேய் இருக்கிறது என ஜீவா கதைகட்டிவிட்ட அந்த வீட்டில் நிஜமாலுமே ஒரு பேய் இருப்பது ஜீவாவுக்கு தெரிய வருகிறது. அதாவது ரொம்ப வருடங்களுக்கு முன் தனது குடும்பத்தாரின் ஒற்றுமைக்காக தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ராதாரவி, அதே குடும்பத்தார் அந்த பங்களாவை பங்கு பிரிப்பதில் சண்டைபோட்டு மல்லுக்கட்டுவதை பார்த்து பேயாக மாறி அவர்களை துரத்துகிறார்.

அப்பேர் பட்ட பேயாகப் பட்ட ரா.ர இப்போது ஜீவா குடும்பமும் தம்பிராமையா குடும்பமும் இதே பங்களாவுக்காக போடும் சண்டை யைப் பார்த்ததும் மறுபடியும் டென்ஷனாகி அவர்களை துரத்த நினைக்கிறார். இந்த பேயின் பிளாஸ்பேக் விஷயங்களை தெரிந்து கொண்ட ஜீவாவால் ராதாரவியை எப்படி சமாதானப்படுத்த முடிந்தது? வீட்டை எப்படி சொந்தமாக்க முடிந்தது என்பதுதான் மீதி கதை என்பதை சொல்ல வேண்டியதில்லை.

கொஞ்ச நாட்கள் சரியான வாய்ப்பு கிடைக்காத நாயகன் ஜீவாவு தன் கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார்.. ஸ்ரீதிவ்யாவுடன் காதல், யதார்த்தமாக ஏதாவது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்வது என குறையில்லாமல் நடிப்பை வழங்கி இருக்கிறார். குறிப்பாக ஜீவாவின் வீடு குறித்த பிளாஸ்பேக் காட்சிகள் நெஞ்சில் அறையும் நிஜம். நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே வந்து போகிறார்..

காமெடிக்கென்றே சுருட்டை முடி கெட்டப்புடன் சூரி. ஜீவாவுடன் சேர்ந்து பேய்க்கதை கட்டவும், பின்னர் பேயை துரத்தவும் அவர் படும் பாடு சிரிப்பை வரவழைக்க முயன்று தோற்று போகிறார். .. பாசகார அம்மா ராதிகா கேஷூவலாக ஸ்கோர் செய்து விட்டு போகிறார். தம்பிராமையாகு படம் முழுவதும் வந்தாலும் .. ஹூம்.., ஒரே மாதிரி வந்து போகிறார்.

பல்வேறு காரணங்களுக்காக பேய் மற்றவர்களை துரத்தி அடிப்பதை பார்த்திருக்கிறோம்.. ஆனால் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்காக ஒரு பேய் களமிறங்கி இருப்பதை .. கொஞ்சம் கலகலப்பாக அதே சமயம் கொஞ்சம் டெரர் கலந்து சொல்ல முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஐக்.. அட்லீயின் தயாரிப்பில் கிடைத்த வாய்ப்பை இயக்குநர் இன்னும் கொஞ்சம் யோசித்து மெருக்கெற்றி இருக்கலாம்.. ஆனாலும் கோடை லீவில் குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்.. !