சங்கத் தலைவன் – விமர்சனம்!

சங்கத் தலைவன் – விமர்சனம்!

நம்ம தமிழ் சினிமாவில் பாசக் கதைகள், மோசக் கதைகள், சிரிப்புக் கதைகள். காதல் கதைகள், காலேஜ் கதைகள், அந்தக் கதைகள், இந்தக் கதைகள் என்று ஏதேதோ வந்து கொண்டு இருந்தாலும் கம்யூனிசக் கதைகள் அபூர்வமாகத்தான் வந்திருக்கின்றன. அந்த அபூர்வ பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ள வந்திருக்கும் படம்தான் ‘சங்கத் தலைவன்’. இப்படம் இரா.பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நாவலில் அடித்த அதே கம்யூனிஸ பிரச்சார நெடி  இந்த சினிமாவில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது என்பதுதான் சோகம். .

கதை என்னவென்றால் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இயங்கி வரும் விசைத்தறி சங்கத்தின் தலைவர் சமுத்திரகனி. அந்தப் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் கருணாஸ். அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு பெண் பாதிப்புக்கு உள்ளாகிறார். அவருக்கு உண்டான நஷ்டஈட்டு தொகையை அந்த தொழிற்சாலை முதலாளி தராமல் ஏமாற்றி வருகிறார். பயம், பதற்றத்துடனே இருக்கும் கருணாஸ், ஒரு கட்டத்தில் யூனியன் தலைவர் சமுத்திரகனியிடம் முறையிடுகிறார். அவர் மூலம் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கிறது. ஆனால் இப்பிரச்னையை பெரிதுப் படுத்திய கருணாஸின் வேலை பறி போகிறது. அதை அடுத்து பிழைக்க வழி தெரியாமக் சமுத்திரகனியோடு சேரும் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? சமுத்திரகனி அடுத்தடுத்து கையில் எடுக்கும் சம்பவங்கள் என்ன? -இதுதான் சங்கத் தலைவன்

டைட்டில் ரோலில் சமுத்திரகனி, ஏகப்பட்ட படங்களில் ஏகப்பட்ட வசனம் பேசி., பேசியே அலுப்படைய செய்தவர் வழக்கம் போல் தன் பங்களிப்பை அளித்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பிட்டிங் போல் பல படங்களில் வந்து போன கருணாஸ், இப்படத்தில் கொஞ்சம் நன்றாகவே நடித்து இருக்கிறார். கருணாசில் ஜோடியாக சுனுலட்சுமி தொடங்கி குடிகாரத் தந்தையாக பிரகதீஸ் வரனும், சமுத்திரக்கனியின் மனைவியாக ரம்யா சுப்பிரமணியன் என்று நாவலில் வந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருப்பது தெரிகிறது.

ஆனால் நாட்டின் துணித் தேவையில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே விசைத்தறி மூலம் உற்பத்தியாகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் தான் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. மனிதர்களின் மானம் காக்கும் ஆடை தயாரிக்கும் தொழில் என்பது இதன் சிறப்பு.. அதை எல்லாம் முன்னிலைப்படுத்தாமல்  இந்தக் கதைக்கு சம்பந்தமில்லாத சகல சர்ச்சைகளிலும் களமாட ஆர்வப்பட்டிருப்பதால் ‘தறியுடன்’ நாவல் படித்தப் போது கிடைத்த முழுமை படத்தில். இல்லை.

மொத்தத்தில் சங்கத் தலைவன் – லைக் பண்ண வைக்கவில்லை!

மார்க் 2.5/5

error: Content is protected !!