January 28, 2022

கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன் சாண்டோ சின்னப்பா தேவர்!

நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் தயாரிப்பாளர்களான ஜெமினி எஸ் எஸ் வாசன், ஏ வி எம் மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார் ஆகியோர் வரிசையில் எந்த வித பின் புலமும் தடம் பதித்து சாதித்தவர்தான் எம் எம் ஏ சின்னப்பா தேவர். ஆம் அவர் மற்ற மூவரைப் போல இன்றளவும் மனதில் நிற்க்கும் பிரமாண்டப் படங்களை தயாரித்தவர் இல்லை தேவர். ஆனால் அவர்களை விட இவருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஒளிவிளக்கு (ஜெமினி), அன்பே வா (ஏவிஎம்), எங்க வீட்டு பிள்ளை (விஜயா) என ஆளுக்கொரு படங்களையே இவர்களால் அப்போது சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்ஜியாரைக் கொண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் தேவர், யாராலும் கணிக்கவோ அடக்கவோ முடியாத சூப்பர் ஈகோ வுக்கு சொந்தக்காரரான எம்ஜியாரை வைத்து 17 படங்கள் தயாரிச்சாராக்கும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் பட்டு வேட்டி சட்டையில் முதலாளிகாக வலம் வந்த காலத்தில் ஒரு எளிய கதர் வேஷ்டி, இடுப்பில் ஒரு துண்டு, எப்போதாவது சட்டை அணிந்துகொண்டு, உடல் முழுக்க திருநீர் பட்டை, நெற்றியில் திருநீர் பட்டையுடன் குங்குமப் பொட்டு. முருகா முருகா என ஒலிக்கும் இதழ்களுடன் வலம் வந்தர் தான் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவு தேவர் என்பதன் சுருக்கம்தான் எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை எடுத்த ராஜா சாண்டோவின் பாணியல் தமிழ் படம் எடுத்ததால் மக்கள் அளித்த பட்டம் சாண்டோ.

1915ம் ஆண்டு இதே ஜூன் மாதத்தின் இதே 28ந் தேதி ராமநாதபுரத்தில் அய்யாவு தேவர், ராமாக்கள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர். அண்ணன் பயில்வான் சுப்பையா தேவர். நடராஜ தேவர், ஆறுமுக தேவர், மாரியப்ப தேவர் என மூன்று தம்பிகள். அந்தக் காலத்தில் பயில்வான் குடும்பம் தேவருடையது. சினிமா கம்பெனிகள் காரைக்குடியில் இயங்கி வந்த காலத்தில் சகோதரர்களுக்குள் முளைத்தது சினிமா ஆசை. தம்பி ஆறுமுக தேவர் சினிமா வில் எடிட்டர் ஆனார் இவர்தான் பின்னாளில் தன் பெயரை எம்.ஏ.திருமுகம் என்று மாற்றி இயக்குனரானார், தேவர் பிலிம்சின் பெரும்பான்மையான படங்களை இயக்கினார்.

சின்னப்பா தேவர் படித்தது 5ம் வகுப்பு வரை. ஆனால் தான் அண்ணன் மாதிரி பெரிய பயில்வனாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்தார். படிப்பை கைவிட்டுவிட்டு பால்வியாபாரம் செய்தார். சோடா கம்பெனி வைத்தார். அண்ணனுடன் இணைந்து உடற்பயிற்சிகூடம் அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். தேவரின் அண்ணன் பயில்வான் சுப்பையா தேவர் 1940களில் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். அண்ணனை பார்க்கும் சாக்கில் சினிமாவையும் பார்த்தார் தேவர். அப்போது எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர் தனது படங்களில் சண்டைக் காட்சிக்கு முக்கியத்துவம் தருவார். அதனால் தேவர் சகோதரர்களை அதற்கு பயன்டுத்திக் கொண்டார்.

சாண்டோ சின்னப்பா தேவரிடம், வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பு சண்டை கற்றுக் கொண்டார். அது இருவருக்கும் இடையே ஆழமான நட்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர்.நடித்த ராஜகுமாரி படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதில் அவர் எம்.ஜி.ஆருடன் போடும் வாள் சண்டை மிகவும் பிரபலம். அதன்பிறகு மோகினி, மர்மயோகி, மங்கையர்கரசி, ராணி போன்ற படங்களில் நடித்தார்.

1953ம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து ஃபார்வேர்டு ஆர்ட் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் நல்ல தங்கை. பத்மினி போன்ற படங்களை தயாரித்தார். அதன் பிறகு 1955ம் ஆண்டு தனியாக தேவர் பிலிம்சை தொடங்கினார். தன் தம்பி எம்.ஏ.திருமுகத்தை இயக்குனர் ஆக்கி, தாய்க்கு பின் தாரம் படத்தை தயாரித்தார். தேவர் பிலிம்சின் முதல் படமே அதிரிபுரி ஹிட் அடித்தது. தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், குடும்ப தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்கு பின் பாசம், தொழிலாளி, வேட்டைக்காரன், கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், விவசாயி, தேர்திருவிழா, காதல் வாகனம் படங்களை தயாரித்தார். அத்தனை யிலும் எம்.ஜி.ஆர். தான் ஹீரோ, இதில் காதல் வாகனம், தேர் திருவிழா படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.

ஒரு கட்டத்தில் விலங்குகளை வைத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் பெரிய படம் ஹாத்தி மேரா சாத்தி. 5 யானைகளை வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம். அதே படத்தை தமிழில் நல்ல நேரம் என்ற பெயரில் தயாரித்தார். அதில் எம்.ஜி.ஆர். கே.ஆர்.விஜயா நடித்தனர். இரண்டு மொழியிலும் செம ஹிட்.

தேவர் பிலிம்ஸ் தயாரித்த ரஜினி நடித்த அன்னை ஓர் ஆலயம் படத்திலும் யானை தான் கதையின் நாயகன். அதே படம் இந்தியில், தர்மேந்திரா நடிப்பில் ரீமேக்காகி வெளிவந்தது. இரண்டிலும் சூப்பர் ஹிட். கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை, ராம் லக்ஷ்மண், ரஜினியை வைத்து அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, ரங்கா, தாய்வீடு படங்களை தயாரித்தது. யானை நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக தேவர் பிலிம்ஸ் தனது லோகோவாக யானையை வைத்துக் கொண்டது. 1977ம் ஆண்டு ஆடு நடித்த ஆட்டுகார அலமேலு படத்தின் வசூல் தேவர் பிலிம்சின் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்டது.

தேவர், விலங்குகளின் பால் மிகுந்த பாசம் கொண்டவர் சொந்தமாக தனது பண்ணையில் சிங்கம், புலி, யானைகளை வளர்த்தார். அவைகளை தன் குழந்தைகள்போல பாதுகாத்தார். சிறந்த முருக பக்தர். தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலில் தேவரின் பங்களிப்பு இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனி பிராகாரம் கட்டிக் கொடுத்தார். குற்றாலம் 5 அருவிக் கரையில் ஒரு விநாயகர் கோவிலையே கட்டிக் கொடுத்தார்.

படம் பூஜை போட்டு அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவார். அதற்க்கு முன்னரே கதை வசனம், நடிகர்கள் கால்ஷீட் என எல்லாமும் பக்காவாக ரெடி செய்து கொள்வார். திரைப்படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து, அதற்க் கேற்ற வகையில் கதை,வசனத்தை அமைப்பார். அவர் படங்களில் கலை அழகு மிளிராது, இலக்கண தர வசங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும்.அதற்க்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா என்பதுதான் உண்மை.

தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து படம் எடுத்தவர் சின்னப்பா தேவர். சொந்த வாழ்க்கை யையும் சினிமாவையும் போட்டு குழப்பிக் கொள்ளாதவர், பல தயாரிப்பாளர்களுக்கு அவர்தான் முன்மாதிரி. 1978ம் ஆண்டு மறைந்த சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் கமர்ஷியல் சினிமாக்களின் பிதாமகன்