October 16, 2021

தொடரும் ஆபத்து! – அடிசினல் உப்பால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் அவுட்!

‘உப்பு இல்லா பண்டம் குப்பையிலேயே’ என்ற பழமொழியை சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், “உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் முன்னரே ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.மேலும், உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்த நிலையில் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் மரணம் அடைவதாக தெரிய வந்துள்ளது

salt oct 31

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) கலந்திருக்கிறது. இது போதாதென்று ரெடிமேட் தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவைப் போடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். மோனோ சோடியம் குளூட்டமேட், சோடியம் நைட்ரேட், சோடியம் சாக்கரின், சோடியம் பைகார்பனேட், சோடியம் பென்சாயேட் போன்றவை உப்பின் பல வகைகள். இதில் ஏதாவது ஒன்று, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் சாஸ்களிலும் நிரம்ப இருக்கிறது.

அதிக உப்பைக் கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அயோடின் கலந்த டேபிள் சால்ட்டைவிட, சாப்பாட்டில் கல் உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது. உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம்.

நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். ஆனால், ஒவ்வொரு உணவிலும் நான்கு டீஸ்பூன் உப்பைக் கொட்டினால், அதனால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.
ஆனால் அந்த உப்பே அதிக அளவு பயன்படுத்தும்போது மனிதர்களுக்கு ஆபத்தாக அமைந்து வருகிறது.

இதனிடையே இதுபற்றி உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், ‘ஒருவர் நாள்தோறும் சராசரியாக தற்போது 9.2 கிராம் உப்பை பயன்படுத்துவதாகவும், அந்த உப்பை குறைத்து ஒருவர் 5 கிராம் உப்பை உட்கொள்வதன் மூலம் ரத்த கொதிப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரியவந்து உள்ளது.உலகம் முழுவதும் அதிக அளவு உப்பை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் மரணம் அடைவதாகவும் லட்சகணக்கானவர்கள் இதய நோய் தாக்குதலுக்கு ஆளாவதாகவும்’ ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.