சல்மான் ருஷ்டி புது புத்தகமான. Victory City,வெற்றி நகரம்’ என்ற பெயருடைய புதிய நாவல் வரப் போகுது!
முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு வந்திருக்கிறார். ஒரு கண் மற்றும் ஒரு கையின் செயல்பாடுகள் இழந்தாலும் சிந்தனையிலும் உத்வேகத்திலும் மாற்றம் இல்லை என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த உலக மதமும் வாழ்வியல் ஒழுக்கங்கள் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. கொடூர வன்முறையையும், சகிப்பின்மையையும், ஒடுக்குமுறைகளையும் மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன, என்பதற்கு வாழும் உதாரணமாக சல்மான் ருஷ்டியின் அந்தக் கண்ணும் கையும் திகழப் போகிறது.
மதத்துக்கு எதிரான போரில் இன்னமும் தோற்றுப் போகாத ருஷ்டி தனது அடுத்த புத்தகத்தை ரெடி செய்து விட்டார். Victory City, ‘வெற்றி நகரம்’ என்ற பெயருடைய அந்தப் புதிய நாவலின் ஒரு சாம்பிள் அத்தியாயத்தின் லின்க்கை பகிர்ந்து இருக்கிறார்.++ முழு நாவல் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. சாம்பிள் அத்தியாயமே அதிரடியாக இருக்கிறது. புத்தகம் பெருவெற்றி அடையவும், விரைவில் உடல் நலம் முழுமையாகத் தேறி மதவெறி கும்பல்களின் கண்களில் தொடர்ந்து விரலை விட்டு ஆட்டவும் வாழ்த்துகிறேன்.
சல்மான் ருஷ்டியின் புதிய புத்தகம் குறித்த என்னுடைய மேற்கண்ட பதிவில் பின்வரும் வரி பல முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறது: ‘இஸ்லாமிய மதகுருமார்களால் தூண்டி விடப்பட்டு, முஸ்லிம்களால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கலவரங்களினால் உந்தப்பட்டு, இஸ்லாமிய மதவெறியன் ஒருவனால் கொடூரமான கொலை முயற்சிக்கு உள்ளான சல்மான் ருஷ்டி மீண்டு வந்திருக்கிறார்.’ இதில் ‘இஸ்லாமிய’, ‘முஸ்லிம்களால்’ என்ற சொற்கள் அவர்களை காயப்படுத்தி இருக்கின்றன. விளைவு, பலர் என்னை சங்கியாக்கி விட்டிருக்கின்றனர். சிலர் வழக்கம் போல எனக்கு பூணூல் போடும் முயற்சியில் இறங்கி விட்டனர்.
அவர்களின் கோபத்தைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வரியில் ஒரு எழுத்து கூடப் பொய் கிடையாது. It’s nothing but pure fact! சாத்தானின் கவிதைகள் புத்தகத்துக்கு எதிரான பிரச்சாரம் இஸ்லாமிய மதகுருமார்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டது என்பதில் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால் அவர்களுக்கு வரலாறு சுத்தமாகத் தெரியாது என்றுதான் அர்த்தம். தமிழ் நாட்டில் கூட பல்வேறு கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இங்கிலாந்து முதல் பாகிஸ்தான் வரை உலகெங்கும் வெள்ளிக்கிழமை தொழுகைகள் முடிந்து வெளியேறிய முஸ்லிம்கள் கல்லெறி போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இங்கிலாந்தில் பொதுவெளியில் புத்தகங்களை எரிக்கும் போராட்டங்களும் அரங்கேறின. ருஷ்டியின் புத்தகங்களை விற்கும் கடைகளுக்கு மிரட்டல்கள் வந்தன. பல்வேறு புத்தகக் கடைகளில் வன்முறைகள் அரங்கேறவும் செய்தன. குண்டுகள் வீசப்பட்டு பல கடைகள் நாசமாயின. புத்தகத்தை பதிப்பித்த பெங்குயின் பதிப்பக அலுவலகத்தில் வீசப்பட்ட குண்டு உரிய நேரத்தில் செயலிழக்கப்பட்டதால் நாசத்தில் இருந்து தப்பித்தது.
அமெரிக்காவிலும் கடைகளுக்கு எதிரான மிரட்டல்கள் விடப்பட்டன. 1989ல் மட்டுமே மொத்தம் 78 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு புத்தகக் கடைகளில் குண்டுகள் வீசப்பட்டன. நியூ யார்க்கில் ருஷ்டி புத்தகத்தின் மதிப்பீட்டை எழுதிய லோக்கல் செய்தித்தாள் அலுவலகம் முழுவதுமாக எரித்துப் போடப்பட்டது. புத்தகத்தை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த எழுத்தாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பதிப்பாளர்கள் இருவர் காயங்களுடன் தப்பித்தனர். இந்தியாவிலும் புத்தகம் உடனடியாக தடை செய்யப்பட்டாலும் கலவரங்கள் நிற்கவில்லை. தொடர் கலவரங்களில் சுமார் 12 பேர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர்.
பாகிஸ்தானிலும் புத்தகம் தடை செய்யப்பட்டாலும் கலவரங்கள் போராட்டங்கள் நடந்தன. இஸ்லாமாபாத்தின் புகழ் பெற்ற Red Mosqueகின் இமாம் மௌலானா அப்துல் ரஷீத் கனி ‘ருஷ்டி சாக வேண்டியவர். அவரைக் கொலை செய்ய யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்,’ என்று அறிக்கை வெளியிட்டார். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் எல்லாம் ருஷ்டியின் கொடும்பாவி கொளுத்தப்பட்டன. பாகிஸ்தானி இளைஞர்கள் சிலர் இணைந்து ருஷ்டியைத் தேடிப் போய் தடைகளை எல்லாம் தாண்டி இறுதியில் கொலை செய்வதாக திரைக்கதை அமைத்து ஒரு பாகிஸ்தானிய படம் 1990ல் வெளியானது. படத்தின் பெயர் International Gorillas.
ருஷ்டியின் தலையைக் கொணர கொமேனி விடுத்த ஃபாத்வாவுக்குப் பின் ருஷ்டி தலைமறைவானார். அவரைக் கொலை செய்ய கத்தியுடன் முஸ்லிம் இளைஞர்கள் தெருத்தெருவாக அலைந்தனர். கணக்கற்றவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். சுமார் நான்கு ஆண்டுகள் பிரிட்டிஷ் உளவுத் துறையின் பாதுகாப்பில் ருஷ்டி தலைமறைவாக வாழ நேரிட்டது. தொண்ணூறுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் முயன்று தோற்றதற்குப் பின் இறுதியில் அவரைக் கொலை செய்வதில் பெருமளவு வெற்றி பெற்றவனும் ஒரு முஸ்லிம் இளைஞன்தான். இது எதையுமே முஸ்லிம்கள் செய்யவில்லை. மேற்சொன்ன எந்த வன்முறைக் கூக்குரலிலும் முஸ்லிம் மதகுருமார்கள் பங்கு இல்லை. கொமேனி ஃபாத்வா கொடுக்கவே இல்லை. ‘முஸ்லிம்கள் பெயரைக் கெடுக்க முஸ்லிம் இமாம்கள் பெயரில் ஃபாத்வா கொடுத்து முஸ்லிம்கள் வேடத்தில் கலவரங்களை நடத்தியது எல்லாம் யூதர்கள்தான்,’ என்று அப்பாவித்தனமாக நம்பும் சௌகரியம் சில illiterateகளுக்கு இருக்கலாம். இந்தப் புத்தகத்தின் வரலாறு முழுமையாகத் தெரிந்த எனக்கு அந்த சௌகரியம் இல்லை.