September 20, 2021

என்கிட்ட இவ்ளோ லவ் -வா? – கரு நாயகி சாய் பல்லவி பெருமிதம்!

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் புதிய படம் கரு. அம்மா மகள் பாசத்தை வித்தியாசமான களத்தில் சொல்ல வந்திருக்கும் படம். இதில் பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக தமிழக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட புகழ்பெற்ற சாய்பல்லவி ஹிரோயினாக நடித்திருக்கிறார். அவரது முதல் தமிழ்த் திரைப்படமாக கரு படம் உருவாகியிருக்கிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் சாம், பாடலாசிரியர் கார்கி, எடிட்டர் ஆண்டனி மற்றும் நடிக நடிகையர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சாய் பல்லவி, “எல்லோருக்கும் வணக்கம். நான் நடிக்க ஆரம்பிச்சது கோஇன்சிடென்டா தான் நடந்துச்சு. இப்படி தற்செயலா நடிக்க வந்த எனக்கு இவ்வளவு அன்பு கொடுத்தது; ஆதரவு கொடுத்தது தமிழ் ஆடியன்ஸ்தான். நீங்க எல்லாம் இல்லன்னா கண்டிப்பா நான் இந்த மேடையில நின்னு பேசிட்டு இருக்க முடியாது. தமிழ் படத்தோட மேடையில வந்து தாங்க்யூ சொல்லணும்னு நெனைச்சிட்டு இருந்தேன். எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸ். நீங்க இல்லன்னா இதெல்லாம் நடந்திருக்காது” என்று தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

“என்கிட்ட இவ்ளோ லவ் சேரும்போது ரெஸ்பான்ஸ்பிலிட்டியும் சேர்ந்து வந்துச்சு. அதனால் யாரும் என்ன பார்க்கும்போது எப்போ தமிழ் படம் பண்ணுறீங்கனு கேட்கும்போது பயம் வரும். ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போது நல்ல படமா பண்ணணும். இவ்ளோ அன்புக்கு நம்ம ரெஸ்பான்சிபிலா இருக்கணும்னு நெனச்சேன். அதான் இந்த பிலிம். விஜய் சார் என்கிட்ட கரு பத்தி சொல்லும்போது நான் நெனச்சேன், நம்ம இவ்ளோ நாள் வெயிட் பண்ண படம் இதுதான்னு எனக்கு தோணுச்சு” என்று குறிப்பிட்டார்.

இயக்குநர் விஜய் பேசும் போது, “இந்தப்படத்தின் கதையை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன். லைகாவில் கதை கேட்டவர்கள் எப்போது இந்தப்படத்தை எடுத்தாலும் எங்கள் நிறுவனத்திற்கு தான் இந்தப்படத்தை செய்ய வேண்டும் என்றார். இந்தப்படம் ஹிரோயினை மையமாக கொண்டது. தனித்தனமை கொண்டஹிரோயின் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினத்தேன். சாய் பல்லவியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தமிழில் நடிக்க கேட்டு நிறைய படங்களை நிராகரித்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். அவரை அணுகி இந்தக்கதையை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவர் நடிப்பில் தனித்தன்மை இருக்கிறது. இந்தப்படம் அவரை மேலும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அவருடன் மிக முக்கியமான பாத்திரத்தில் குழந்தை வெரோனிகா நடித்திருக்கிறார்.

ஒரு ரகசியம் அனைவருக்கும் சொல்கிறேன். முதலில் இந்தப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட குழந்தை வேறொருவர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர்தான இருப்பார். அவர் இந்தக்கேரக்டருக்கு கொஞ்சம் முதிர்ச்சியாக இருப்பதாக எனக்குத்தோன்றியது. ஷூட்டிங்கிற்கு முதல நாள் மும்பை நண்பர் ஒரு விளம்பரத்தை அனுப்பியிருந்தார். அதிலிருந்தவர் தான் வெரோனிகா. உடனடியாக அவரை தொடர்பு கொண்டு அழைத்து வந்தோம்.சாய்பல்லவி முதலில் பயந்தார். நான் இன்னும் இவளுடன் பழகவில்லை ஷூட்டிங்கை தள்ளிவைக்கலாமா என்றார். ஆனால் வெரோனிகா அற்புதமாக நடித்தார். இந்தப்படம் தெய்வத்திருமகள் போன்று ஒரு புதிய அனுபவத்தைத்தரும். இந்தப்படத்தை உருவாக்க என்னுடன் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் ஆணடனி இந்தப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் எப்போதும் நாங்கள் என்ன எடுத்து வந்தாலும் ஃபுட்டெஜ் பார்த்து என்ன இப்படி எடுத்திருக்கிறீர்கள் எனத்திட்டுவார். அவர் நடிக்கும் போது அவரைத்திட்டும் வாய்ப்பு கிடைத்து. ஒழுங்காக நடிக்கும்படி சொல்லி திட்டினோம். என நகைச்சுவையாக பேசினார்.

கரு படம் முழுவேலைகளும் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

கதிரவன்