January 25, 2022

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று காலமானார்.

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 73. இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமியின் விருதை பெற்றவர்.தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர்.

கடந்த ஓராண்டுக்கு முன் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் 15-ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமானார்.

பிரபஞ்சனின் வயது 73. (பிறந்த தேதி:27.4.1945). மனைவி பிரமிளா. மகன் மூத்தவர் கெளதமன், பாரிசில் தனியார் கம்பெனியில் பணி. மனைவி, மகன் மகளுடன் வசிக்கிறார். இரண்டாமவர் கெளரிசங்கர், முதுகலைப்பட்டம் பெற்ற ஓவியர். புதுவையில் தொழில். மூன்றாவது மகன் சதீஷ் பிரான்சு நாட்டில் பொறியாளர்.

பிரபஞ்சன் முழு நேர எழுத்தாளர். சிறிதுகாலம் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் கெளரவ விரிவுரை யாளராக இருந்திருக்கிறார். சிறிது காலம் தேசிய புத்தக டிரஸ்ட்டில் கெளரவ ஆலோசகர். குமுதம், விகடன், குங்குமம் பத்திரிகைகளில் பணி புரிந்து இருக்கிறார். ‘என்னதான் சுதந்திர எழுத்தாளனாகவே இருக்க விரும்பினாலும், உலை கொதித்தாக வேண்டுமே? மாதம் பிறந்தால் பணம் தேவைப்படுகிறதே?’ இந்த எண்ணம்தான் வணிகப் பத்திரிகை களில் பணி புரிய இவரைத் தூண்டியிருக்கிறது. என்றாலும் “இதற்குத்தானா நான் பிறந்தது?” என்று அடிக்கடி அவரைச் சங்கடப்படுத்தும் கேள்வி உதித்து அவரைப் பணிகளினின்றும் விலக வைத்து விட்டது. ஆனாலும் மற்றப் பத்திரிகைகளை விட ஆனந்தவிகடனில் தமக்கு அதிக சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்கிறார்.

கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் படிப்புப் படித்துத் தேறியிருந்தார். 1995ல் அவரது “வானம் வசப்படும்” நாவலுக்காக சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.1982, மற்றும் 1986ம் ஆண்டுகளில் அவரது நூல்களுக்காக தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார். முதல் முறை “ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்” என்ற சிறுகதைத் தொகுதிக்காக. இரண்டாவது முறை “ஆண்களும் பெண்களும்” குறுநாவல் தொகுதிக்காக.

வானம்பாடி கவிதாமண்டலத்தில் அவருக்குச் சூட்டப்பட்ட புனைபெயர், பிரபஞ்சகானன். அதைச் சுருக்கி பிரபஞ்சன் என்று வைத்துக் கொண்டிருக்கிறார். பிரபஞ்ச கவி என்ற பெயரில் கவிதைகள் எழுதியதுண்டு.. தாமரை, பொன்னடியானின் முல்லைச் சரம் இதழ்களிலும், நெ.சி.தெய்வசிகாமணியின் ‘தெசிணி’ பத்திரிகையில் புதுவை பொன்னித்துறைவன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

அவரது முதல் சிறுகதை வெளியானது 16 வது வயதில். “பரணி” என்ற பத்திரிகையில்.தலைப்பு “முதல் பாதை”.அவரது அம்மா, தம்பிக்கு பிச்சைக்காரச் சிறுவனைக் காட்டிக் காட்டிச் சோறு ஊட்டிக்கொண்டிருக்கிறார். சாப்பிடாவிட்டால் பிச்சைக்காரனுக்குப் போட்டு விடுவேன். இப்படிச் சொல்லிச் சொல்லியே ஊட்டிக்கொண்டிருக்கிறார். கடைசியில், ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பிச்சைக்காரச் சிறுவனுக்கு ஒரு கவளம் கூடக் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவத்தின் நெருடலில் எழுந்ததுதான் அவரது முதல் கதை.

அவரது பல நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் வந்துள்ளன. பெண்ணியம் பற்றிய அவரது கட்டுரைகள், நூல்கள் பரபரபரப்பாகப் பேசப்படுபவை. காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், வானம் வசப்படும், நேற்று மனிதர்கள், பெண்மை வெல்க,பதவி, சந்தியா ஆகியவை குறிப்பிடத் தக்கவை.வானம் வசப்படும் என்ற நூலுக்காக சாகித்யா அகாடமி விருது வென்றார். துபாஷ் ஆனந்தரங்கம்பிள்ளையின் வரலாற்றை ஒட்டி எழுதிய சரித்திர நாவல் அன்றைய புதுவையைப் படம் பிடித்துக் காட்டுவது. இது வரை வெளிவந்த அநேகமாக அனைத்துச் சிறுகதைகளும் சேர்ந்து இரண்டு தொகுப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.