December 1, 2021

வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துகளைக் குவித்த தலைவர்கள் ; பண்டோரா பேப்பர்ஸ் அதிர்ச்சி!

ண்டடோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இயங்கும் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) அவ்வப்போது உலக அளவிலான செய்திகளில் புயலைக் கிளப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல்தலைவர்கள் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோ பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி, தி கார்டியன் நாளேடு, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து வெளியிட்டிருக்கும் இந்த தகவல்களில் இந்தியாவைச் சேர்ந்த 380க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக தலைவர்களின் பெயர்களும் இதில் உள்ளது. குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் வரி ஏய்ப்பு மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு பனாமா பேப்பர் என்ற பெயரில் பலரின் முறைகேடுகள் குறித்து தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது `பண்டோரா பேப்பர்ஸ்’ வெளிவந்துள்ளதாகக் கருதப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ‘இந்தியன் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், பாப் பாடகர் திவா சகிரா, மாடலிங் தொழில்செய்யும் கிளாடியா சிஃபர் ஆகியோர் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த முறை பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர்கள் வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்கள், நிதியமைச்சர், நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ஜோர்டான் நாட்டின் அரசர், உக்ரைன் அதிபர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், செக்குடியரசின் பிரதமர்,பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதி செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்கள் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்கரர்கள் பெயர்கள் அடங்கியுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள், பிரதமர்கள், கோடீஸ்வரர்கள், பிரபலங்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துக்கள், போலி நிறுவனம் உருவாக்கி அதில் சேர்த்துள்ள சொத்துகள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள 956 நிறுவனங்களின் ரகசிய ஆவணங்கள்,பல்வேறு நாடுகளின் அதிகாரமிக்க 356 அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பெயர்கள், அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் இதில் சிக்கியுள்ளனர்.

பணக்கார நாடுகளால் உருவாக்கப்பட்ட நிதி ரகசிய முறையால் உலகெங்கும் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு வளைந்து ஒடிந்தது என்பதை சமமற்ற நோக்கை இந்த விசாரணை வழங்குகிறது. உலகளாவிய அரசியலில் எந்த அளவுக்கு ஆழமாக ரகசிய நிதி ஊடுருவி இருக்கிறது என்றும் வெளிநாடுகளில் சட்டவிரோத நிதிப் பதுக்கள், முதலீடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசாங்கங்களும் உலகளாவிய அமைப்புகளும் ஏன் சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கான ஆய்வுகளை அறிக்கை வழங்குகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.