March 25, 2023

சபரிமலை புகழ் ரெஹனா ஃபாத்திமா இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படிக்கட்டுகளை பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் நெருங்கிய நிலையில் கடும் எதிர்பால் திரும்பிய ரெஹனா ஃபாத்திமா, கேரளா முஸ்லீம் ஜமா அத்-தில் இருந்து நீக்கப்பட்டார்.

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழையக் கட்டுப்பாடுகள் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை (அக்டோபர் 17) முதல் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர் சில பெண்கள். நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்திவரும் சிலர், குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களது எதிர்ப்பை மீறி, இதுவரை 9 பெண்கள் சபரிமலை கோயிலுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆனாலும், இப்போதுவரை ஒருவர் கூட சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கவில்லை.

அதாவ்து கடந்த 19ஆம் தேதியன்று, தெலங்கானாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா ஜக்குலாவும், கேரளாவைச் சேர்ந்த நடிகை ரஹானா பாத்திமாவும் சபரிமலைக்குச் சென்றனர். கோயில் சன்னிதானப் படிகள் வரை இவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் போலீசார். ஆனால், இரு பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று கூறி, அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டனர். அதே நேரத்தில், தந்திரியும் கோயில் கதவுகளை மூடினார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இருவரும் கூறினர்.

இந் நிலையில், ரெஹனா மற்றும் அவரது குடும்பத்தினரை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது கேரள முஸ்லீம் ஜமாத் கவுன்சில். லட்சக்கணக்கான இந்து மத பக்தர்களின் மனம் புண்படும்படி ரஹானா நடந்துள்ளதாகவும், அவர் இஸ்லாமியப் பெயரைப் பயன்படுத்த உரிமையற்றவர் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு, அவர் மீது சட்டப்பிரிவு 153ஏ பிரிவின் கீழ், கேரள அரசு வழக்கு தொடர வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. ரஹானாவையும் அவரது குடும்பத்தினரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லீம் ஜமாத்தை அறிவுறுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.