தமிழ்நாடு காங்கிரஸ் ( புதுத்) தலைவர் ஆனார் திருநாவுக்கரசர்!

தமிழ்நாடு காங்கிரஸ் ( புதுத்) தலைவர் ஆனார்  திருநாவுக்கரசர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில், 28 வயதில் 1977-ல் முதன்முதலில் அறந்தாங்கியில் களமிறங்கினார் சு.திருநாவுக்கரசர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தின் எஞ்சிய நான்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆரால் அறந்தாங்கிக்கு மட்டும் வரமுடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக தோற்று, அறந்தாங்கியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்காக திருநாவுக்கரசரை துணை சபாநாயகர் நியமித்தார் எம்.ஜி.ஆர்.

thiru sep 14

அடுத்த தேர்தலிலும் அறந்தாங்கியை வென்று கூட்டுறவு மற்றும் தொழில் துறை அமைச்சரானார். அதிலிருந்தே தொடர் வெற்றிகளை குவித்து வந்த அரசர், 1989-ல் ஜெ அணியில் நின்றும் 1991-ல் தனிக் கட்சி தொடங்கியும் வெற்றி பெற்றார். 1996-வரை அறந்தாங்கி தொகுதியில் வெற்றி வாகை சூடிய திருநாவுக்கரசர், 1999-ல் பாஜக – திமுக கூட்டணியில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மத்திய அமைச்சரும் ஆனார். 2000-ல் நடந்த இடைத் தேர்தலிலும் 2001-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அறந்தாங்கியில் திருநாவுக்கரசரால் நிறுத்தப்பட்ட அன்பரசனும், அரசனும் வென்றார்கள்.

இந்த நிலையில், 2002-ல் தனது எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை பாஜக-வில் இணைத்தார் திருநாவுக்கரசர். 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக-வோடு கூட்டணி வைத்த ஜெயலலிதா, திருநாவுக்கரசருக்கு தொகுதி கிடைக்கக்கூடாது என்பதற்காகவே புதுக்கோட்டையை அதிமுக-வுக்கு பிடிவாதமாக கேட்டு வாங்கினார். அந்த வருத்தத்தைப் போக்க அவரை மத்திய பிரதேசம் வழியாக மாநிலங்களவைக்கு அனுப்பியது பாஜக. அதே சமயம், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருநாவுக்கரசரால் அறந்தாங்கியில் நிறுத்தப்பட்ட காத்த முத்துவை திமுக வேட்பாளர் உதயம் சண்முகம் தோற்கடித்தார். தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் தொகுதியை கைக்குள் வைத்திருந்த திருநாவுக்கரசருக்கு அறந்தாங்கி தந்த முதல் தோல்வி அது.

இதையடுத்து, 2009 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். அதற்குமேல் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸில் இணைந்தவர், ஒரு காலத்தில் திருநாவுக்கரசரின் கோட்டையாக இருந்த அறந்தாங்கி தொகுதியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக-வின் புதுமுக வேட்பாளர் ராஜநாயகத்திடம் தோல்வியை தழுவினார்.

முன் குறிப்பு :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துவந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து நான்கு மாதங்களாக தலைவர் நியமிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது தமிழ்நாடு காங்கிரஸ். இந்தநிலையில் விரைவில் தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து 4 மாதங்களாக காலியாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்தன திவேதி அறிவித்துள்ளார்.

தன்னை நியமனம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், திருநாவுக்கரசர் கட்சியை முன்னெடுத்து செல்லுவதற்கான நடவடிக்கைகளில் செயல்பட வேண்டும், தொண்டர்களை ஒருங்கிணைத்து அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

புதிய நிமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் நிதானத்தை இழந்துவிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!