December 9, 2022

உக்ரைன் மீது போர் : ரஷ்யாவின் த்துமீறிய நடவடிக்கையால் உலக நாடுகள் பதட்டம்!

ந்த கால சோவியத் ஒன்றிய நாடாக இருந்து இப்போது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் அப்படீன்னு ரஷியாவின் நீண்டகால திட்டமாக இருக்குது. இதில் முதல் படியாக கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்து தன் வசமாக்கியது.அத்தோடு உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் ரஷியா அவர்களின் மூலமாக உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு காய் நகர்த்தி வருது.

இப்படியான சூழலில் ரஷியாவின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துகொள்ள அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் உறுப்பு நாடாக சேர உக்ரைன் விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நேட்டோ உறுப்பு நாடுகள் பச்சை கொடி காட்டின. அதே சமயம் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போவதோடு நேட்டோ படைகளால் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ரஷியா அஞ்சுகிறது. இதனால்தான் உக்ரைன் நேட்டோவில் இணைவதை ரஷியா கடுமையாக எதிர்க்கிறது. எனவேதான் இதுவரையில் உக்ரைனை ஆக்கிரமிக்க மறைமுகமாக காய் நகர்த்தி வந்த ரஷியா, படையெடுப்பின் மூலம் உக்ரைனை ஆக்கிரமிக்க முடிவு செய்து அந்த நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது.

படைகள் குவிப்பு பற்றிய செய்திகள் வெளியான நாள் முதலே ரஷியா உக்ரைன் மீது எந்த நேரத்திலும் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால் ரஷியாவோ உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் இல்லை எனவும், பெலாரஸ் நாட்டுடனான கூட்டுப்பயிற்சிக்காகவே படைகளை குவித்துள்ளதாகவும் கூறி பசாங்கு செய்து வந்துச்சு.

அதேவேளையில் எல்லையில் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் ரஷியா படையெடுப்புக்கான சாக்குபோக்குகளை தானே உருவாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களில் பிரிவினைவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதலை தூண்டிவிட்டுச்சு. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்த சூழலில் ரஷிய அதிபர் புதின் நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அறிவிச்சார். இது தொடர்பாக சுமார் 1 மணி நேரம் தொலைக்காட்சியில் உரையாற்றிய புதின், வரலாறு மற்றும் கலாசாரம் ரீதியில் உக்ரைன் எப்போதுமே ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதி அப்ப்டீன்னு சொன்னார். அதைத்தொடர்ந்து அவர் தனிநாடுகளாக அறிவிக்கப்பட்ட லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க்கில் ரஷிய படைகள் நுழைவதற்கான உத்தரவை பிறப்பித்தார். அங்கு ரஷிய படைகள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடும் என அவர் அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

அவர் அப்படி கூறினாலும் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைய அனுமதித்தது படையெடுப்பின் தொடக்கமாகவே உலகநாடுகள் கருதுகின்றன. இதனால் புதினின் இந்த நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செஞ்சாய்ங்க.
மேலும் இந்த விவகாரத்தில் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் உலக தலைவர்கள் எச்சரித்தனர். அதன்படியே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷியா மீது நேற்று பொருளாதார தடைகளை அறிவித்தன.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ரஷியாவின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிச்சார். மேற்கத்திய நாடுகளுடன் ரஷியா வர்த்தகம் செய்யும் திறனை குறிவைத்து இந்த தடைகள் அறிவிக்கப்படுவதாக அவர் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிப்பது இது முதல் முறையாகும்.

அதே போல் “ரஷியா மீது முதல் பகுதி தடைகளாக 5 ரஷிய வங்கிகள் மற்றும் 3 ரஷிய தொழிலதிபர்கள் மீது பொருளாதார தடைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. நிலைமை மோசமாகும்பட்சத்தில் தடைகள் மேலும் கடுமையாக்கப்படும்” என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிச்சார். அத்துடன் 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் ரஷியாவை சேர்ந்த 27 தனி நபர்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளை விதிச்சுது. ரஷியாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி ரத்து செய்துள்ளது. இதுதவிர ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் ரஷியாவின் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனிநபர்கள் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவிச்சுது.

இப்படி உலக நாடுகள் பலவும் ரஷியாவுக்கு எதிராக திரும்பியுள்ளபோதும் அந்த நாடு உக்ரைன் மீதான விரோத போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. பெருளாதார தடைகளை பொருட்படுத்தாமல் படையெடுப்புக்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருது. அந்த வகையில் ரஷியாவுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்த நாட்டு நாடாளுமன்றத்திடம் அதிபர் புதின் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து நாடாளுமன்றத்தின் மேலவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரஷியாவுக்கு வெளியே ராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கான புதினின் கோரிக்கையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். அதை தொடர்ந்து, ரஷிய படைகளை வெளிநாட்டில் பயன்படுத்துவதற்கான அதிகாரம் புதினுக்கு வழங்கப்பட்டுச்சு. இதனால் புதின் எந்த நேரத்திலும் உக்ரைன் மீது படையெடுப்புக்கு உத்தரவிடலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே ரஷியா, உக்ரைனில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் வெளியேற்றும் பணியை தொடங்கியது. தலைநகர் கீவில் உள்ள ரஷிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விரைவில் போர் தொடங்கலாம் என்பதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக ஏஃஎப்ப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் அறிவுரையையும் மீறி உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.