கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி : ரஷ்ய அதிபர் மகளுக்கு முதல் ஊசி – வீடியோ!
உலகையே மிரட்டி முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யா, அதன் மருத்துவ சோதனையை ஜூன் 18 அன்று தொடங்கி விட்டது. அதை அடுத்து தன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்த தடுப்பூசியை உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே போடப்பட்டுள்ளதாகவும் புடின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று ( ஆகஸ்ட் 12 ஆம் தேதி) க்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புடின் , உடல் நிலை சரியில்லாமல் உள்ள தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு இத்தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக, ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி முதலில் போடப் படும் எனவும், புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும், தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.