தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கோரியது. இதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் பேசிய தமிழக தேர்தல் ஆணையர், பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இருக்கும் விவரங்களை கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கும்.

செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் அறிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ஆந்தைரிப்போர்ட்டர் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்… செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

error: Content is protected !!