ரம்மி : அன்றும் இன்றும்!

ரம்மி : அன்றும் இன்றும்!

ன்று தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படும் ‘ஆன்லைன் ரம்மி’ பற்றி யோசித்துப் பார்க்கிறேன்… இன்று கெளரவமான விளையாட்டாகக் கருதப்படும் இது, நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது (சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு) ‘சீட்டாட்டம்’ என்றே அருவருப்புடன் அழைக்கப்பட்டது. நான் முதன்முதலில் இந்த சீட்டுக் கட்டைத் தொட்டுப் பார்த்ததும் ‘அதையெல்லாம் தொடக்கூடாது’ என்று என் தந்தை அதை வெடுக்கென்று பிடுங்கி எறிந்ததும் இப்போது என் நினைவுக்கு வருகிறது. அந்த சீட்டுக் கட்டு எப்படி என் கைக்கு வந்தது?

அப்போதெல்லாம் எங்கள் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கே மின் வசதி கிடையாது. கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்குகள்தான். நான் பார்த்த முதல் மின்சார விளக்கு என்பது எங்கள் வீட்டு சைக்கிளிலிருந்த டயனமோ விளக்கும் டார்ச் லைட்டும்தான்.

மூன்றாவதாக நான் ஆர்வத்தோடு பார்த்த மின்விளக்கு, திருச்செங்கோடு மலை மேலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் கோபுரத்தில், இரவு நேரங்களில் எரியவிடப்படும் விளக்கு. எங்கள் கிராமதிற்கும் திருச்செங்கோட்டிற்கும் எட்டு கிமீ தூரம்தான் என்பதால், அந்த கோபுர விளக்கு, ஒரு நட்சத்திரம்போல் எனக்குத் தெரியும்.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

நாங்களெல்லாம் விவசாயிகள். கிணற்றுப் பாசனம்தான். மின்சார வசதியில்லாததால், வயல்களுக்கு நீர் பாய்ச்ச, மாடு பூட்டி, ஏற்றம்தான் இறைக்க வேண்டும். அது மிகவும் கஷ்டமாக இருந்ததாலும் அதனால் நிறைய வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் போனதாலும் கிணற்றிலிருந்து நீரிறைக்க, ஆயில் என்ஜின் வாங்க முடிவு செய்தார் என் தந்தை. அதன் பெயர் ‘கிர்லோஷ்கர்’ என்ஜின். அது வந்த மரப்பெட்டியில்தான் அந்த சீட்டுக் கட்டு இருந்தது. அதைத்தான் நான் தொட்டுப் பார்த்தேன்.

அன்றைய காலகட்டத்தில் சூதாட்டமாகச் சீட்டாடுபவர்களையும், கள்ளச்சாராயம் குடிப்பவர்களையும் மக்கள் கேவலமாகத்தான் பார்த்தார்கள். அரசாங்கமும் சட்ட விரோதமாகத்தான் பார்த்தது. அவர்களும் நிஜமாகவே கூச்சப்பட்டுக் கொண்டு, போலீஸுக்குப் பயந்து கொண்டு ஊருக்கு வெளியில்தான் அதையெல்லாம் செய்தார்கள். அதன்காரணமாக, பொழுது போக்காகச் சீட்டாடுவதற்குக்கூட மக்கள் கூச்சப்பட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு?

அரசாங்கத்தின் ஆசியோடு நடந்த, உலகமயமாக்கல் என்னும் ஆழிப்பேரலையில், எல்லா தர்மங்களும் நியாயங்களும் அப்படியே அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

செ. இளங்கோவன்

error: Content is protected !!