September 20, 2021

ருக்மிணி தேவி அருண்டேல்!

ருக்மிணி தேவி, 1904ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி – சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். தந்தை அரசு பொறியாளர் என்பதால் ஊர் ஊராக மாற்றலாகிக் கொண்டிருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில் தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கிருந்த தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில மகளை ஊக்கப்படுத்தினார்.ருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார் ருக்மிணி, ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் (1900 +) இளம் பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது.

அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு ருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார ரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர் களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத் தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார்.

தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக ருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, ப்ரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்

முன்னதாக 1920ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னி பெஸண்ட் தியசோஃபிக்கல் சொஸைட்டிக்கு அழைத்தார். அன்னி பெஸண்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, ருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.ருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், க்ளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு ருக்மிணியைக் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை ருக்மிணி கண்டதில்லை.

1933ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண ருக்மிணியை அழைத்திருந்தார். அக்கலையினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். முதலில் மைலாப்பூர் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது ருக்மணியின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், ருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கலாசேத்திராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜோர்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமசுவாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர் உறுதுணையாக இருந்தனர்.

இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24ஆம் தேதி, ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. பத்மபூஷண் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

கலாக்ஷேத்ரா உருவாகக் காரணமாக இருந்த மதுரை அம்மணி ருக்மிணி தேவி அருண்டேல் மறைந்த நாளின்று