January 27, 2022

பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய்! – கவர்னர் அறிவிப்பு!

”பொங்கல் திருநாளை தமிழர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டபொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர திருவாருர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவாருர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங் களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட 1000 ருபாய் அரசால் வழங்கப்படும்”என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் குட்டத்தொடர் நேற்று கூடியது. 2019 புத்தாண்டின் முதல் கூட்டமான இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதன் விபரம் இதோ:-

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் முலம் மாநிலத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்துள்ளது பாராட்டுக்குரியது. தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியோடு, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவதன் முலம் பசிப்பிணி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பொது விநியோக திட்டத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரிவான கணினிமயமாக்கல் திட்டத்தின் முலம் போலி குடும்ப அட்டைகளும், பன்முறை பயனாளி பதிவுகளும் அறவே அகற்றப்பட்டுள்ளன. வெளிப்படையான, சீரான, பொது விநியோகத்திட்டத்தை உறுதி செய்வதற்காக 2.01 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது ஒரு பாராட்டுகுரிய சாதனையாகும்.

பேரிடர் ஏற்பட்ட போது ஏழை, எளிய மக்களுக்கு நேசமுடன் உதவிக்கரம் நீட்டிய மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா வழியில், காவிரி வடிநிலப் பகுதிகளில் கஜா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தையும், வட மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சியின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டபொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர திருவாருர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவாருர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட 1000 ருபாய் அரசால் வழங்கப்படும்.

நீர்பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் 2,962 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயலாகத்தில் உள்ளது. பாசன ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகளே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட திட்டம், நீர்பாசன அமைப்புகளைப் புதுப்பிக்கும் குடிமராமத்து திட்டம் ஆகியவை முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் நீரொழுங்கிக்குப் பதிலாக புதிதாக புதிதாக ஒரு நீரொழுங்கியை அமைக்க 387.60 கோடி ருபாயை அரசு அனுமதித்துள்ளது பாராட்டுக்குரியது. ஏற்கனவே அறிவித்தப்படி 1,652 கோடி ருபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் அத்திகடவு அவிநாசி திட்டம், பவானி ஆற்றின் உபரி நீரை கோயம்புத்துார், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 74 ஏரிகளிலும், 971 குளங்களிலும் நிரப்பி, அதன் வாயிலாக 24,468 ஏக்கர் வேளாண் விளைநிலங்கள் பாசன வசதி பெறச் செய்வதோடு நிலத்தடி நீரை செறிவூட்டி குடிநீர் வழங்கலையும் செம்மைப்படுத்தும். இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில், முதல்வரால் இந்த திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது என அறிவித்தார்.

அரசு போக்குவரத்து கழங்கங்கள் நாள் ஒன்றுக்கு 1.74 கோடி பயணிகள் பயன்பெறும் வகையில், 19,488 வழித்தடங்களில் 21,678 பேருந்துகளை இயக்கி வருகின்றன. பேருந்து கட்டணங்களை உயர்த்திய பின்னரும், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் போக்குவரத்துக் கட்டணம் குறைவாக உள்ளது. டீசல் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவினை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை டீசல் மானியமாக 268,35 கோடியை வழங்கி உள்ளது. ஜெர்மன் வங்கியின் உதவியுடன் போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. பழைய பேருந்துகளுக்கு பதிலாக எரிபொருள் செயல்திறன் மிக்க பி.எஸ். 6 என்ற பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் சென்னை, கோயம்புத்துார், மதுரை போன்ற மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளும் இந்த திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு கவர்னர் தனது உரையில் தெரிவித்தார்.