January 29, 2023

வ்வொரு மனித உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றி மேலும் சொல்வதானால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. இந்த ரத்தம் உற்பத்தியாகும் இடம் எதுவென்றால் எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் உற்பத்தியாகின்றன. ஆமா.. ரத்தம் சிவப்பு நிறமாக இருப்பது ஏன் என்று கேட்டால் இதன் சிவப்பு அணுக்களின் உள்ளே ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். அதனால் 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான். அதிலும் இப்போது ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன. இப்படியாப்பட்ட ரத்த அமைப்பில் புதுசாக சேர்ந்து இருப்பதுதான் ராக்கி.. ஆம்.. பணத்தை தண்ணீராக செலவழித்து எடுத்த சினிமாக்களைப் பார்த்த நமக்கு முழுக்க ரத்தத்தைத் தண்ணீராக செலவழித்து ஒரு படம் கொடுத்து அதையும் தமிழுக்கு புதுசா இருக்கில்லே என்று சிலரை சொல்ல வைத்திருப்பதுதான் இப்படத்தின் ஸ்பெஷல்.

கதை குறித்து ஒரு வரியில் சொல்வதென்றால் இலங்கையின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி தமிழகம் வந்த ஒரு குடும்பத்தின் குரூருதர தாண்டவ ஆட்டம்தான் முழு படம்.

நம் அருகில் அமர்ந்து படம் பார்த்த தம்பி பாஷயில் கதையைச் சொல்வதென்றால் ‘இலங்கைப் போரில் உயிர்பிழைச்சு தமிழகம் வருகின்றனர் ராக்கியின் (வசந்த் ரவி) குடும்பத்தினர் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பெயரெடுத்த இங்கே சாப்பாட்டுக்கே வழி எதுவுமில்லாத நிலையில் கேங்க்ஸ்டரான மணிமாறனுடன் (பாரதிராஜா) சேர்ந்து அடி, தடி, கொலை போன்ற சாகசங்கள் செய்கிறார் ரவியின் அப்பா. அந்த அடாவடி நைனா இறந்த பின்பு அவர் செய்து கொண்டிருந்த எல்லா ரத்த பொரியல் சமையல் வேலையையும் ராக்கி விரும்பி பொறுப்பாக செய்கிறான்.அச்சூழலில் மணிமாறனின் மகனுக்கும் ராக்கிக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையால் மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மாவை (ரோகிணி) கொல்ல பதிலுக்கு ராக்கி மணிமாறனின் மகனைக் கொல்ல இதனால் வளர்த்த கடா மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையே பகை மூழ்கிறது. இச்சூழலில் ராக்கியின் ஆசைத் தங்கச்சி அமுதா (ரவீனா ரவி) காணாமல் போகிறார். அதே சமயம் செய்த ரணகள ரத்த படையலுக்காக 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் ராக்கி தன் தங்கையைக் கண்டுபிடித்தாரா? மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையிலான பகை தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கான பதிலை ‘ராக்கி’ படத்தின் திரைக்கதை சொல்கிறது. இலங்கையிலிருந்து தமிழகம் வந்தோர்களில் இன்றளவும் முக்கால்வாசி பேர் அகதி முகாமில் அடைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அப்படியான இலங்கை ரிட்டர்ன் தமிழ்வாசியை வைத்து ஒரு குரூரமான அதுவும் பாரதிராஜாவையும் கமிட் செய்து களேபரத்தனமான ஒரு பக்கா சிகப்பு படத்தை கொடுத்து அசத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்

ராக்கியாக நடித்திருக்கும் வசந்த் ரவி ரோலுக்கு ஏற்ற முக பாவமெல்லாம் காட்டத் தெரியவில்லை என்றாலும் உடல் மொழியில் சமாளித்து ஜஸ்ட் பாஸ் வாங்கி விடுகிறார் , மணிமாறன் என்ற தாதா ரோலில் பாரதிராஜா நடித்திருக்கிறார். ராக்கியின் அம்மாவாக ரோகிணியும், ராக்கியின் தங்கை கதாபாத்திரத்தில் ரவீனா ரவி நடித்து இருக்கிறார்கள்

ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் கேமரா அட்டகாசம் செய்திருக்கிறது. அதுபோல் தர்புகா சிவாவின் பின்னணி இசை கச்சிதம்.

அதே சமயம் இந்த படத்தை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பார்க்க வேண்டாம் என்று உரத்தக் குரலில் சொல்லியேஆக வேண்டிய அளவிற்கு உள்ளது. அதிலும் சுத்தியலால் எதிராளி மண்டை ஓடு நொறுங்கும்வரை அடித்தே கொல்வது, குத்தூசியால் குத்திக் கொல்வது, ஆணியால் கண்களில் குத்துவது, சடலத்தை வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றுவது, குடலை உருவி மாலையாகப் போடுவது என வன்முறையை பிழியப் பிழிய கொடுத்து அதையும் பார்வையாளர்களை ரசிக்க வைக்க பழகி தியேட்டரெங்கும் ரத்த வாடையை பரவ விட்டிருக்கிறார் ..!

இப்படி தொடக்கம் முதல் முதல் கடைசி வரை ஒரு ரத்தம்., ரத்தம், ரத்தம் என்று செலவழித்து கவர முயற்சித்திருக்கிறார்

ஆக தங்க ஊசி என்பதால் எடுத்து கண்ணில் எடுத்து சொருகிக் கொள்ளலாமோ?

மார்க் 2.5 / 5