துப்பறியும் ‘ராக்கி’ – விமர்சனம்!

துப்பறியும் ‘ராக்கி’  – விமர்சனம்!

உங்களுக்கு நாய் பிடிக்குமா? அதிலும் தமிழ் சினிமா நாயகன் மாதிரி சாகசம் செய்யும் நாய்களைப் பிடிக்குமா? ஆம் எனில் ஒரு எட்டு போய் திரையரங்கில் ராக்கி படத்தைப் பாருங்கள்..ஒரு நாய் தனது எஜமான் மீது வைத்துள்ள கட்டற்ற அன்பையும், அந்த எஜமானையே இழந்த நாய் பதறிப் போய் செய்யும் அதிரடி வீர தீர சாகசமும் தான் ராக்கி படக் கதை.

இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். ஆனால் அப்படி குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டை நாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள். அதிலும் இந்த நாய்களை மோப்ப நாய்களாக பழக்கப்படுத்துவது எப்படி தெரியுமா?

குறிப்பாக போதைப் பொருட்களை, வெடிகுண்டுகளை, கொள்ளையர்களை அது எப்படி கண்டு பிடிக்கிறது. என்றால் 220 மில்லியன் நுகர்ச்சி செல்களை தன் மூக்கில் கொண்டிருப்பதுதான் அதன் மோப்பத் திறனின் ரகசியம். மனிதனின் மோப்ப சக்தி இதை விட பல மடங்கு அதிகம். ஆனாலும் நமக்கு பிரவுன்சுகரின் சுவையோ கஞ்சாவின் வாசனையோ அந்தப் பழக்கம் இல்லாதவரை தெரியாது. ஆனால் நாய்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறது. ரத்தத்தின் வாசனை..பிரவுன்சுகர், கஞ்சாவின் வாசனை என்றால் எல்லா நாய்களுக்கும் அது தெரிவதில்லை சாதாரண நாய்கள் மல்லிகைப் பூவையும் கஞ்சாவையும் ஒன்றாகவே நுகரும். ஆனால் மோப்ப நாய்கள் கஞ்சாவை, அபினை,புரவுன்சுகரை தனித்தனியாக நுகரும் தன்மை கொண்டவை. ஆமாம் கஞ்சாவுக்கும் பிரவுன் சுகருக்கும் அபினுக்கும் இன்னும் உள்ள போதைப் பொருட்களுக்கும் பழக்கப்படுத்தப் படுகின்றன இந்த போலீஸ் மோப்ப நாய்கள். வெடிகுண்டை கண்டறிய நாய்களுக்கு ஜெலட்டின் குச்சிகளின் வாசனை பழக்கப்படுத்தப்படுகின்றன. மெல்ல கொல்லும் போதையை மனிதன் எப்படி பழகிய பிறகு தேடி வெறி கொண்டு ஓடுகிறானோ அதே வெறி மோப்ப நாய்களுக்கு ஊட்டப் படுகிறது.இப்படி உருவான ஒரு நாய்தான் ராக்கி.

கதைப்படி போலீஸ் ஆபீசரான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்) மிகவும் நேர்மையானவர், அவர் ஒரு நாள் டூட்டி முடிந்து வரும் போது விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து காப்பாற்றி, வீட்டுக்கு எடுத்து வந்து ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் இந்த ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார் சந்தோஷ். துப்பறிவ தில் எக்ஸ்பர்ட்டாகி விட்ட ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் அவர். இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. அதே சமயம் சிறையில் இருந்து பாம் பாண்டியன் எனும் குற்றவாளியை தேடி செல்லும் போது சாயாஜி மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப் படுகிறார் சந்தோஷ். இதையடுத்து, தன் பாஸை கொன்ற குற்றவாளிகளைத் தேடிக் கண்டி பிடித்து ராக்கி பழி வாங்குவது தான் ஸ்கிரீன் பிளே.

ரொம்ப நாட்களாக ஒரே ஒரு கதாநாயகன் பத்திருபது பேரை அடித்து துவம்சம் பண்ணுவதையே பார்த்து சலித்து போன கண்களுக்கு ஒரு நாயின் வீர விளையாட்டை திரையில் பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கிறது. குறிப்பாக தனது எஜமான் மீது ராக்கி கொண்டிருக்கும் பாசம் முதல் அவரது கொலைக்காக வீரவேசமாக கிளம்பி நடத்தும் அதிரடி சாகசம் அம்புட்டும் இன்டரஸ்டிங் காகவே இருக்கிறது. ஸ்ரீகாந்த் ரொம்ப நாளைக்குப் பிறகு வந்தாலும் பொருத்தமான ரோலில் வந்து கவர்ந்து இருக்கிறார். ஹீரோயின் ஈஷான்ஷா தனிக் கவனம் பெறுகிறார்.. மற்ற ரோல்களில் நடித்தவர்களும் தங்கள் பங்களிப்பை மிகக் கச்சிதமாக அளித்திருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படம். ஆனால் பெரும்பாலும் தமிழ் நடிகர்கள் நிரம்பியிருப்பதால் தெலுங்கு வாடை அதிகம் வீசவில்லை.

ஆனால் நாயின் சாகசம்தான் முழுப் படம் என்பதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க யோசித்திருக்கலாம். என்றாலும் கோடை விடுமுறையில் டைம்பாஸ் பண்ண ஒரு படம் கேரண்டி..

மார்க் 3 / 5

error: Content is protected !!