January 20, 2022

ஐ.எஸ். தீவிரவாத ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் டெல்லி மற்றும் உ.பியில் கைது!

உலக நாடுகளை அச்சுறுதிவரும் சிரியா மற்றும் ஈராக்கில் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருக்கு, இந்தியாவில் சிலர் மறைமுகமாக ஆதரவு திரட்டி, ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்த நிலையில் வெளிநாட்டு உதவியுடன் இயங்கும் புதிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஒன்று இந்தியாவில் இயங்குவதை தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த அமைப்பினர் செயல்பட்டு வந்த 17 இடங்களில் சோதனையிட்டு 16 பேரை சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடித்தனர். அவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை நடந்த இடங்களில் இருந்து பெருமளவு வெடிமருந்து விமானத்தை தாக்க உதவும் ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டது.

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள நகரங்களை குறிவைத்து இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைபினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக யூகிக்க முடிகிறது என தேசிய புலனாய்வு நிறுவனத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் தெரிவித்தார். அந்த புதிய பயங்கரவாத அமைப்பின் பெயர் ‘ஹர்கத் உல் ஹார்ப்-இ-இஸ்லாம்’ என தெரியவந்துள்ளது. இந்த அமைப்பில் மொத்தம் 20 பேர் செயல்பட கூடும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினரை வெளிநாட்டில் இருந்து சிலர் இயக்கி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வெளிநாட்டில் இருந்து ஆட்டி வைக்கும் அமைப்பு அல்லது அமைப்பினர் பற்றி இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

கடந்த 6 மாத காலமாக சிலரை சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு நிறுவனம் கண்காணித்து வந்தது. அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இன்று திடீரென்று ஒரே நேரத்தில் 17 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

டெல்லியில் சீலாம்பூர் பகுதியிலும் உத்தரபிரதேசத்தின் லக்னோ அம்ரோஹா மற்றும் ஹாபூர் மாவட்டங்களிலும் மொத்தம் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது 7 ரிவால்வர்கள், அவற்றுக்கான ஏராளமான தோட்டாக்கள், ரிமோட் கண்ட்ரோல் கருவிகள், பெருமளவு வெடிமருந்து, ரொக்கம் 7.5 லட்சம் ரூபாய், லேப்டாப்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானங்களை குறிவைத்து தாக்க உதவும் ராக்கெட் லாஞ்சர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 17 இடங்களிலும் இருந்து 100 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. அந்த போன்களில் பயன்படுத்தக்கூடிய 135 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டன.