September 29, 2021

சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோ! – கேரளா அரசு அசத்தல் ஐடியா!

தினந்தோறும் நவீன மயமாகி வரும் உலகில், சாத்தியப்படாது என்று கருதப்படும் செயல்களையும்.. எந்திரக்கரங்கள் எட்டிப் பிடிக்கின்றன. அந்த வகையில் கேரளாவில் முதன்முறையாக சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜென் ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரோபோக்களை கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்த வாரம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கேரள நீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஷாய்னாமோல் கூறினார்.

இந்த ரோபோக்கள் வை-பை, ப்ளூ டூத், கட்டுப்பாட்டு கூறுகள், நான்கு கால்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாக்கடையில் இருந்து கழிவுகளை அகற்ற உதவும் வாளி மற்றும் அதனை தூக்க உதவும் சிலந்தி கால்கள் போன்ற கொக்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கேரள நீர் வாரிய அமைப்பின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் குழாய், கழிவு நீர் சுத்திகரிப்பில் ஏற்படும் கசிவினை சீரமைக்க தொழில்நுட்ப உதவியுடன் புதிய வழிமுறைகள் கையாளப்பட உள்ளது.கேரளாவில் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசின் சார்பில் துவக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலம் உள்நாட்டில் இருக்கும் திறமைகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசின் நிதியில் முழுமை பெற்றுள்ள இந்த ரோபா தயாரிப்புகள் அடுத்த வாரம் செயல்படுத்தப்பட உள்ளன எனவும் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டார்.

பண்டிகூட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் திருவனந்தபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை திறப்புகள் இருப்பதால் அங்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த ரோபோக்கள் ஒரு மணி நேரத்தில் 4 பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்கின்றன. இன்றைய சோதனையின் போது 30 கிலோ கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டன. கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாகும். அதே சமயம் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது என்று ஜென் ரோபோடிக் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.