சென்னையில் டிராஃபிக் ரோபோ போலீஸ் அறிமுகம்!

சென்னையில் டிராஃபிக் ரோபோ போலீஸ் அறிமுகம்!

சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப் படுத்த மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து போலீசார் சார்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டு இருக்கும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்கு வரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப் படுத்த முடியவில்லை.இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை நேற்று (ஜனவரி 14) சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப் படுத்தியுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 7வது மாடியில் குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள ரோபோவை நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்தார். அப்போது போலீஸ் கமிஷனருக்கு ரோபோ கை கொடுத்து போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் நிருபர்களிடம், “சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சாலைகளில் இடம் பெற்றுள்ள கோடுகள், போக்குவரத்து சமிக்ஞைகள் பற்றிய விளக்கங்கள், சாலைகளில் இடம் பெற்றுள்ள சாலை பாதுகாப்பு உப கரணங்கள், அதன் பயன்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் இந்த காட்சி கூடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கூடம் தனியார் நிறுவனத்தினர் ஒத்துழைப்பு மற்றும் 24 பள்ளி மாணவர்களின் உதவியோடு உருவாக்கப்பட்டள்ளது. இந்த காட்சிக்கூடத்தின் சிறப்பு அம்சமாக, ரோடியோ எனும் ரோபோ இடம் பெற்றள்ளது. குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு எளிதில் புரியக் கூடிய வகையிலும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சாலை பாதுகாப்பு விதி முறைகள் என 10 சாலை பாதுகாப்பு விதிமுறைகளை குழந்தைகளுக்கு இந்த ரோபோ விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கி கூறும்.

4 அடி உயரம் கொண்ட ரோபோ ₹5 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் செயல்பாட்டை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரவேற்பை பொருத்து இந்த ரோபோ எதிர்காலத்தில் மாநகர சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்தி கைகளை உயர்த்தி பாதசாரிகள் செல்ல உதவும். வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!