October 19, 2021

யாருக்கு ஓட்டு? – ஆர்.கே. நகர் தொகுதியில் ரசீது அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரமும், வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்படைந்து வருகிறது. அடுத்த மாதம் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் 6 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அங்கு நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரமும் அங்கு விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட வினோபா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

rk nagar mar 21 a

அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகரில் தாம் வெற்றி பெற்ற பின் சிறப்பாக நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார். சென்னை ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கங்கைஅமரன் அத் தொகுதியில் நேற்றும் மக்கள் சந்திப்பை நிகழ்த்தி பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் எதிரொலியாகவே ஆர்.கே.நகரில் தாம் போட்டியிடுவதாகக் கூறினார்.

இதனிடையே, ஒவ்வொரு தேர்தலின் போது தேர்தல் ஆணையம் ஏதாவது ஒரு புதிய யுக்தியை கையாண்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும், யாருக்கு ஓட்டுப்போட்டோம் எனும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது யாருக்கு ஓட்டுப்போட்டோம் எனும் வசதியை ஏற்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன்படி சென்னை நாடாளுமன்ற தொகுதியிலும், 2016 சட்டசபை தேர்தலின் போது அண்ணா நகர் தொகுதியிலும், சோதனை செய்யும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய வசதியில், நாம் ஓட்டுப்போடும் போது, வேட்பாளர் பெயருக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தும் போது அதனுடன் பொருத்தப்பட்ட கருவியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு துண்டு சீட்டு வெளியே வரும். அதில் நாம் யாருக்கு ஓட்டுப்போட்டோமோ அவரது கட்சி சின்னம் அதில் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் நமது வாக்குப்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2.62 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அதிக வாக்காளர்கள் இருப்பதால், 256 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.