November 30, 2021

பாலிவுட்டில் ரியல் சாக்லேட் பாய் ரிஷிகபூர்- சில நினைவு குறிப்புகள்!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் (வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக மும்பை யில் உள்ள எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று(ஏப்ரல் 29) காலை அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

பாலிவுட்டில் அந்தக் கால ரியல் சாக்லேட்பாயும், 70-ல் வெளியான மேரா நாம் ஜோக்கர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவருமான ரிஷி கபூர், கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே இந்திய அளவில் புகழை அடைந்தார். ஆம் வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்ன ஓர் அடையாளத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இதைத் தனது முதல் படத்திலேயே எளிதாகச் சாதித்தவர் ரிஷி கபூர்.

தன் பாலிவுட் எண்ட்ரி குறித்து பேசிய போது, என்னை அறிமுகம் செய்வதற்காக என் தந்தை இந்தப் படத்தை எடுக்கவில்லை. மேரா நாம் ஜோக்கர் படத்தினால் ஏற்பட்ட கடனை அடைக்கவே பாபி படத்தை உருவாக்கினார். அப்போது பிரபல நடிகராக இருந்த ராஜேஷ் கண்ணாவுக்குச் சம்பளம் தர முடியாததால் வேறுவழியில்லாமல் என்னையே கதா நாயகனாகத் தேர்வு செய்தார் என்றார் ரிஷி கபூர். பாலிவுட்டில் இளவயதுக் காதல் தொடர்பான படங்களில் முதலில் முத்திரை பதித்தது பாபி தான். இன்றுவரைக்கும் இந்தியாவில் அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் பாபிக்கும் ஓர் இடமுண்டு. 1970களில் ஷோலேவுக்கு அடுத்ததாக அதிகமாக வசூலித்தது பாபி தான். அதேபோல இரு வருடங்கள் கழித்து ரஷியாவில் பாபி வெளியானபோது வசூலில் சாதனை செய்தது. ராஜ் கபூருக்கு ஆவாரா படம் எப்படி ரஷ்யாவில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல ரிஷி கபூருக்கு பாபி அமைந்தது. மேரா நாம் ஜோக்கர் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, பாபியில் நம்பமுடியாத வெற்றி என எல்லாவிதமாகவும் ஓர் அட்டகாசமான தொடக்கத்துடன் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் ரிஷி கபூர்.

இளமைக் கொப்புளிக்கும் காதல் படம் மூலமாக அறிமுகமானதால் தொடர்ந்து ஏராளமான காதல் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் காதல் மன்னனாகவும் புன்னகை மன்னனாகவும் 70களில் இளைஞர்களாக இருந்தவர்களை வெகுவாக ஈர்த்தார். Khel Khel Mein, Kabhi Kabhie போன்ற படங்கள் பாபியின் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள உதவின. 1977-ல் வெளியான Hum Kisise Kum Nahin, Amar Akbar Anthony ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று ரிஷி கபூரின் அந்தஸ்த்தை மேலும் உயர்த்தின.

1979-ல் ஜெயபிரதா, ரிஷி கபூருடன் இணைந்து நடித்த ஹிந்திப் படம் – சர்கம். லக்‌ஷ்மிகாந்த் பியாரிலாலின் பாடல்கள் இந்திய ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டன. முதல் பத்து வருடங்களில் பல வெற்றிப் படங்கள் முக்கியமாக அற்புதமான பாடல்களைக் கொண்ட படங்களில் நடித்து திரையுலகுக்குப் புத்துணர்ச்சியை அளித்தார் ரிஷி கபூர். அதே சமயம் 1974 முதல் ரிஷி கபூர் – நீது சிங் ஆகிய இருவரும் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்து வெற்றிகரமான ஜோடியாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார்கள். ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்த நீது சிங்கை 1980-ல் திருமணம் செய்துகொண்டார். ரன்பீர் கபூர், ரித்திமா கபூர் என இவர்களுக்கு இரு குழந்தைகள். ரிஷி கபூரும் நீது சிங்கும் திருமணத்துக்கு முன்பு ஜோடியாக 11 படங்களிலும் திருமணத்துக்குப் பிறகு 2 படங்களிலும் நடித்தார்கள்.

இவர்களுடைய திருமணம் & காதல் கதை சுவாரசியமானது. பாபி படத்தில் நீதுவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உருவாகாத போதும் அடுத்தப் படமான Zehreela Insaan-ல் நீதுவுடன் இணைந்து நடித்தார் ரிஷு கபூர். முதல் படத்திலேயே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட நல்ல நண்பர்கள் ஆனார்கள். மும்பைக்கு வெளியே நீது இல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோதுதான் வெறுமையை உணர்ந்துள்ளார் ரிஷி கபூர். உடனடியாக நீதுவுக்கு ஒரு தந்தி அடித்துவிட்டார். உன் ஞாபகம் அதிகமாக உள்ளது என்று.

உடனே வானில் பறந்தார் நீது சிங். ஆனால், உன்னைக் காதலிப்பது நிஜம், ஆனால் ஒருபோதும் திருமணம் செய்யமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார் ரிஷி கபூர். இதில் கொஞ்சம் குழம்பினாலும் காதலுக்குச் சம்மதம் சொல்லிவிட்டார் நீது. 1975 முதல் இருவரும் காதலர்களாக உலவ ஆரம்பித்தார்கள். காதலிக்க ஆரம்பித்த பிறகு மனம் மாறினார். நீதுவைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என முடிவெடுத்து அதன் படியே செய்து கொண்டார் ரிஷி கபூர்.

பின்னர் 1992-ல் தீவானா படம் தான் ரிஷி கபூரின் பெயரைச் சொல்லும் கடைசிப் படமாக அமைந்தது. அதன்பிறகு ரிஷி கபூரின் பாதையில் பயணிக்க ஆரம்பித்து வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுத்தார் ஷாருக் கான்.ஆனாலும் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து தொடர்ந்து பாலிவுட்டுக்குப் பங்களித்து வந்தார். Do Dooni Chaar (2010), Kapoor & Sons (2016) ஆகிய படங்களில் ஏற்று நடித்த வேடங்களுக்காக ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றார் ரிஷி கபூர்.

ஆனாலும் மகன் ரன்பீர் கபூரின் வெற்றிகள் மீதும் ரிஷி கபூருக்கு எப்போதும் பெருமை உண்டு. இயல்பான கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறார். தன் வயதை உடைய இளைஞன் நிஜ வாழ்க்கையில் என்ன செய்வானோ அதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யவே விரும்புவதாக அவர் கூறினார்.

ஆனால் இந்த சாக்லேட் பாயின் கடைசிக் காலக்கட்டம் போராட்டமாக அமைந்துவிட்டது. 2018ல் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்குத் திரும்பினார் . நீது கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இப்பேர்பட்ட பாலிவுட் சாதனையாளர் ராஜ மரியாதையோடு இறுதி யாத்திரிரை போயிருக்க வேண்டியவர் .. அவருடைய துரதிருஷ்டம்.. இப்படி இந்த கொரோனா அரக்கனால் எண்ணி 20 நபர்களின் வழியனுப்புதலோடு விடை பெற்றிருக்கிறார். நடிகர் வினோத் கன்னா மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த.. இளைய தலைமுறை நடிகர்கள் யாருமே வராதது குறித்து கோபம் கொப்பளிக்க பொங்கித் தீர்த்தார் ரிஷி. “இப்போதைய இளைய தலைமுறை நடிகர் களுக்கு சினிமாவில் இருக்கும் சீனியர்களை மதிக்கத் தெரியவில்லை. இந்தத் துறை யாரால் வளர்ந்திருக்கிறது என்பதையே அவர்கள் உணரவில்லை. வினோத் கன்னா போன்ற சீனியர் களுக்கே மரியாதை செலுத்த வரவில்லையென்றால் இவர்களைப் பற்றி என்னதான் சொல்வது..” என்று பத்திரிகைகளிடம் குமுறியிருந்தார் ரிஷி. இப்போது அவரது சாவுக்கு யாருமே வர முடியாத சூழல்.. துரதிருஷ்டம்தான்..!

 

இதையெல்லாம்விட தன்னைப் பெற்ற தாயின் இறப்புக்குக் கூட வர முடியாமல் கேன்சர் சிகிச்சைக்காக நியூயார்க்கில் மாட்டிக் கொண்டார் ரிஷி. இப்படியும் ஒரு துரதிருஷ்டம் ரிஷிக்கு..! கபூரின் குடும்பத்திலேயே ராஜ்கபூருக்கு பிறகு இன்றைய தலைமுறைவரையிலும் பெயரையும், புகழையும் பெற்றவர் இவர் ஒருவர்தான். ஆனால், மிகுந்த துரதிருஷ்டசாலியாக இந்த உலகத்தை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

அவருடைய ஆன்மா சாந்தியாகட்டும்..!