September 17, 2021

ரியோ ஒலிம்பிக்கில் கால் பதிக்கும் தமிழர்கள்!

31-ஆவது ஒலிம்பிக் போட்டி, பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தகுதிச்சுற்றுகள் கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதில் 400 மீ. தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான தேர்வு பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

rio july 11

இதில் தருண் அய்யாசாமி, ஆரோக்ய ராஜீவ், குன்கு முகமது, முகமது அனாஸ் ஆகியோர் அடங்கிய அணி, 3:00.91 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது.

தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யாசாமி. தாயார் பூங்கொடி. தருணின் ஏழு வயதில் தந்தை இறந்துவிட்டார். தாயார், தனியார் பள்ளி ஆசிரியர். இளம் வயதில் ஆரம்பித்த தடகள ஆர்வம் தற்போது தருணை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

2012-14 காலகட்டத்தில் பள்ளிப் பருவத்தில் மாநில தடகளப் போட்டிகளில் 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்றுள்ளார். 2014-இல் மாநில தடகளப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீ. ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் இலக்கை தருண் கடந்தது தற்போது வரை சாதனையாக உள்ளதாகக் கூறுகிறார் அவரது பள்ளிப் பருவ பயிற்சியாளர் ஜே.அழகேசன்.

மேலும் அவர் கூறுகையில், “இதே போன்று மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் தருண் படைத்துள்ளார். தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016-இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கமும், 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கமும் வென்றுள்ளார். தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்’ என்றார்.

இது குறித்து தருணின் தாயார் பூங்கொடி கூறுகையில், “எனது மகன் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது’ என்றார்.

மற்றொரு தமிழரான ஆரோக்ய ராஜீவ், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை செளந்திரராஜன், வேன் ஓட்டுநர் ஆவார். ராணுவத்தில் பணியாற்றி வரும் ஆரோக்ய ராஜீவ், 2014-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஆரம்பத்தில் நீளம் தாண்டுதல் வீரராக இருந்து பின்னர் ஓட்டப் பந்தயத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய தடகள வீரர்கள் ஜின்சன் ஜான்சன், தரம்பீர் சிங், ரெஞ்சித் மகேஸ்வரி ஆகிய மூவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், கேரளாவைச் சேர்ந்த 30 வயதான ரெஞ்சித், 17.30 மீட்டர் நீளத்தை 20.45 வினாடிகளில் தாண்டி, தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே ரெஞ்சித், காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இதே போல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்ததோடு ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். கடந்த 36 ஆண்டு வரலாற்றில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த 25 வயதான ஜின்சன் ஜான்சன், 800 மீட்டர் ஓட்டபந்தயத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அடிசினலாக ஒலிம்பிக் பற்றிய மினி வரலாறு இதோ:

பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கி.மு.776-ம் ஆண்டிலிருந்து கி.பி.392-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டிருக்கின்றன. தற்போது நடைபெறும் நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸ் நகரத்தில் 1896-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்த நவீன ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோடி பியர் டி.குபெர்டின் என்பவர் தான். 1936-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான், ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை உணர்த்தும் ஒலிம்பிக் ஜோதியானது ஏற்றப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை ஜோதி ஏற்றப்பட்ட பின்னரே விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கின்றன. மஞ்சள், கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை என்று ஐந்து வண்ண வளையங்களைக் கொண்டு வெள்ளைத்துணியில் ஒலிம்பிக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீன ஒலிம்பிக்கில் ஜேம்ஸ் கானோலி என்பவரே முதன் முறையாக தங்க பதக்கத்தை வென்றார். குளிர்கால ஒலிம்பிக், கோடைகால ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றவர்களுக்கு) என ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 28 விளையாட்டுக்கள் ஒலிம்பிக்கில் இடம்பெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பதக்கத்தில் கிரேக்க கடவுள் நைக்கியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்விட்சர்லாந்தின் லாசானோ என்கிற இடத்தில் ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையிடம் அமைந்துள்ளது. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப்போர்களினால் ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டது. பாரீஸில் 1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.