மியான்மர் ; இரண்டு பத்திரிகையாளர்கள் கருணை அடிப்படையில் விடுதலை!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்தான பிரச்னை விஸ்வரூபம் எடுத்த போது, அது குறித்து செய்தி சேகரித்த 2 பத்திரிகையாளர்கள், மியான்மர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியுள்ளனர் என்று கூறி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட 2 பத்திரிகையாளர் களை தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து செய்தி சேகரித்து வந்தன. இதற்கிடையே, சட்ட விதிமுறைகளை மீறி அரசின் ரகசியங்களை சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ராயட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரண்டு பத்திரிகையாளர்களை யாங்கூன் காவல்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உதவியாக இருந்த காவலரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுதலை செய்யவேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மியான்மர் அரசை பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வா லோன், யாவ் சோய் ஊ ஆகியோரை மியான்மர் அரசு இன்று விடுவித்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வா லோன்,”என் பணிக்கு திரும்ப என்னால் இனியும் காத்திருக்க முடியாது. நான் ஒரு பத்திரிக்கையாளர். நான் என் பணியை தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார். பின்னர், மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.