December 2, 2022

ஏர் இந்தியா: தர்மம் மறுபடி வெல்லும்? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ந்தியா மீண்டும் தனது பாரம்பரிய அறத்தை நிலை நிறுத்தும் போக்கில் தனது முன்னாள் தொழில் அதிபர்களுக்கு நியாயம் செய்யும் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் பிரதமர் நேருவால் அரசுடமை ஆக்கப்பட்ட ஏர்- இந்தியா மீண்டும் அதன் முன்னாள் முதலாளியான டாடா நிறுவனத்திடம் வழங்கப்படவுள்ளது. சுமார் ₹18,000 கோடி கொடுத்து அரசிடமிருந்து தனதாக்கிக் கொண்டுள்ளனர் டாடா நிறுவனத்தினர் . இதொரு பெரிய வெற்றியாகும். ஏனெனில் யானை வாயில் போனக் கரும்பு மீண்டும் முழுசாக கிடைக்கிறது என்றால் சும்மாவா? அரசு விடுதலை அடைந்த புதிதில் தனக்கென்று ஒரு விமான சேவை தேவை என்று நினைத்து டாடாவின் நிறுவனத்தை சுமார் ₹3 கோடி நஷ்ட ஈடு கொடுத்து வாங்கியது. ஆனாலும் நிறுவனத்தை திறம்பட நடத்த பொருத்தமான ஆட்கள் இல்லாததாலும், டாடாவின் கோபத்தைத் தணிக்கவும் ஜே ஆர் டி டாடாவையே தலைமை நிர்வாகி ஆக்கியது. இதனால் நிறுவனம் நன்கு வளர்ந்தது.

அதுவும் நீண்ட நாள் நிலைக்கவில்லை. உள்நாட்டு விமான சேவையான இந்தியன் ஏர்லைன்ஸையும் அரசுடமை ஆக்கினார் இந்திரா காந்தி. அத்துடன் டாடாவை நீக்கி விட்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளைக் கொண்டு நடத்தவும் முடிவெடுத்தார். ஆனால் இதைப் பின்னால் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியின் தொழில் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கோகோ கோலா, ஐ பி எம் பட்டியலில் டாடாவையும் இணைத்து வெளியேற்றி முடித்தார் என்று கூறப்பட்டது.

இப்படி ஏர்- இந்தியா அதிகாரிகள், அரசியல்வாதிகள் கையில் சிக்கி குரங்குக் கையில் பூமாலையாக சின்னபின்னமாகி விட்டது. சுமார் ₹70,000 கோடி கடன் சுமையிலும், தினசரி சுமார் ₹20 கோடி இழப்பிலும் உள்ள நிலையில் முன்னாள் முதலாளிகளே வயதான ஏர்- இந்தியா மகாராஜாவை ஆட்கொள்ள முன் வந்துள்ளனர். அரசின் இம்முடிவை எதிர்ப்போர்களும் உண்டு. ஏர்- இந்தியாவை விற்காமல் கூட்டு அடிப்படையில் இணைந்து செயல்படலாம் என்று சிலர் கருதுகின்றனர். அப்படி இணைபவர்கள் ஏராளமான நிபந்தனைகளை விதிப்பார்கள். முதலில் கடனுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். டாடாக்களும் கடனுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால் பழுதான விமானங்களை வாங்கிக் கொள்கின்றனர். சிறிதளவு கடனையும் ஏற்கலாம்.

டாடா நிறுவனம் ஏற்கனவே இரண்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. விஸ்தாரா, ஏர்- ஏசியா என இரண்டு சேவைகளை வழங்கி வரும் நிலையில் ஏர்- இந்தியாவை விஸ்தாராவுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய வாய்ப்பு அதிகம். ஏர்- இந்தியாவை வாங்குவதன் மூலம் விமான சேவை சந்தையில் கணிசமாக 40% தை அந்நிறுவனம் கைப்பற்றலாம். மேலும் இந்தியன் ஏர்லைன்ஸ்சம் இணைவதால் அதை ஏர்- ஏசியாவுடன் இணைக்கலாம். ஆக, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவையில் தனது பழைய பெருமையை மீண்டும் பெற வாய்ப்புள்ளது.

டாடா நிறுவனத்தின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளும் வரலாம். குறிப்பாக கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்காத சூழ்நிலை, பொருளாதாரத் தேக்கம் ஆகியன கடும் சவால்கள். வாங்கிய விமானங்களில் மாற்றங்களை செய்ய வேண்டும். கட்டணமும் குறைவு; நிறைந்த சேவையையும் அளிக்க வேண்டும். போட்டி நிறைந்த சந்தையில் நிலைக்க வேண்டும்.

டாடாவுக்கு விமான சேவையில் பழம் பெருமை என்ன? ஜே ஆர் டி டாடா த்தான் இந்தியாவின் உரிமம் பெற்ற முதல் விமானி. விடுதலைக்கு முன்பே 1934 இல் அதைச் செய்தார். மேலும் கராச்சி- மும்பை இடையே விமானத்தை செலுத்தி முதல் பைலட்டும் ஆனார். டாடா குடும்பம் இந்தியாவின் தொழில் முன்னோடிகள். இன்றும் பிரதமருக்கு, குடியரசுத் தலைவருக்கு என்று தனி விமானங்கள் உள்ளன. அவற்றை அமைச்சகமோ, விமானப்படையோ நிர்வகிக்கலாம். ஒரு தனியார் நிறுவனத்தை அரசுடமை ஆக்க வேண்டாம்.

ரமேஷ் பாபு