ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன். 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ,செங்கல் பட்டு மாவட்டத்தில் பிறந்த இவர், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமையாக திகழ்ந்தவர். தற்போது ஆதிதிராவிடர்களுக்குக் கிடைத்துள்ள இட ஒதுக்கீடு, உள்ளிட்ட சலுகைகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்.
குறிப்பிட்ட தெருவில் செருப்பணிந்து செல்லக் கூடாது… பெண்கள் மேலாடை அணியக் கூடாது… தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களில் நுழையக் கூடாது… இது தான் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவின் நிலை… இந்த போக்கு தற்போது முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்றாலும், நவீன ஒடுக்கு முறை தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைத்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே களமாடிய மனிதர் தான் இரட்டை மலை சீனிவாசன்.
மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த மாமனிதர், இரட்டைமலை சீனிவாசன். எந்த பெயரால் இந்திய சமூகம் தம்மை ஒடுக்குகிறதோ அதே பெயரால் சுதந்திரத் திற்காக பாடுபட வேண்டும் என்று அறிவித்து இவர் தொடங்கிய பறையன் இதழ், தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. 1893 ஆம் ஆண்டு தொடங்கி 1900 ஆம் ஆண்டு வரை வெளிவந்த பறையன் இதழில், சமூக ஒடுக்கு முறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார். பறையன் இதழில் இவர் சுட்டிக்காட்டிய பல விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை உரையாடலை பறையன் இதழ், சமூகத்தில் நிகழ்த்தியது.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை சார்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட இரட்டை மலை சீனிவாசன், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1923 ஆம் ஆண்டு சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளும், தீர்மானங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. சாதிய பாகுபாடின்றி மக்கள் எந்த வீதியிலும் நடக்கலாம். தாழ்த்தப் பட்ட மக்களை, பள்ளர், பறையர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்க வேண்டும், மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சமூக சீர்த்திருத்தங்களை இவர் சட்டப்பேரவையில் எழுப்பி, 2 ஆயிரம் ஆண்டு கால அடிமை விளங்கை உடைத் தெறிய பாடுபட்டார்.
லண்டனில் 1930 – 1931 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்து கொண்டார் இரட்டை மலை சீனிவாசன்… தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும்… தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இவர் ஆற்றிய உரைகள், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னையை சர்வதேச கவனம் பெறச் செய்தன.
இந்து மதம் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குகிறது என்று கூறி, அயோத்தி தாசர், அம்பேத்கர் போன்றவர்கள் பவுத்த மதத்தைத் தழுவிய போதும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மீக மரபுகளைத் தேடுவதில் இரட்டை மலை சீனிவாசன் ஆர்வம் காட்டினார். ஆலயப் பிரவேச போராட்டம் தமிழகத்தில் வீறுகொண்டு பெரும் போராட்டமாக மாறிய போது, தாழ்த்தப்பட்ட மக்களின் முற்காலத்திய உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலய பிரவேசத்தை அவர் ஆதரித்து நின்றார்.
தென்னாப்பிரிக்காவில், 1930 ஆம் ஆண்டு ஹரிஜன சேவா சங்கத்தை மகாத்மா காந்தி தொடங்கி செயல்பட்ட போது, அவரோடு தாழ்த்தப்பட்ட மேம்பாடு சார்ந்து இரட்டை மலை சீனிவாசன் உரையாடலை மேற்கொண்டார். பல்வேறு அரசியல் சூழல்களில், இந்தியா சிக்கித் தவித்த போது, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை மட்டுமே ஒற்றை நோக்கம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை மூலமே சமூக விடுதலை சாத்தியம் என்றும் காத்திரமாக நம்பி தன்னை அர்ப்பணித்து பாடுபட்டவர் இரட்டை மலை சீனிவாசன்.
உலகம் முழுக்க கொரோனா தொற்றைப் பரப்பியதாகச் சொல்லப்படும் சீனாவில் தற்போது ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான…
பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம்…
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட…
தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் என்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்றுவித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சியில் சத்துணவு…
புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட…
This website uses cookies.